வடமராட்சி கிழக்கு நாகர் கோவிலினைச் சேர்ந்த 40 மீனவர்களுக்கு சேவாலங்கா நிறுவனத்தின் நிதியுதவியில் தலா 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான படகுகளும் இயந்திரங்களும் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நாகர்கோவில் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த தொழில் உபகரணங்களை மீனவர்களுக்கு வழங்கினார். இதன்போது உரையாற்றிய மிச்சேல் ஜே.சிசன்,
‘அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன் இப்பிரதேசம் ஓரளவேனும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் மிகவும் அழகிய பிரதேசங்களாகும். ஆனால் இங்குள்ள மக்களின் வாழ்ககைதான் அழகில்லாமல் இருக்கிறது’ என்றார்.
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தூதரகங்களில் பணியாற்றும் தூதுவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போது ‘நீங்கள் பணியாற்றும் நாடுகளில் மக்களின் வாழ்க்கை தொடர்பாகவும் அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கூறுங்கள்’ என்று எம்மிடம் கேட்டறிந்துகொண்டார்.
அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் மிகவும் அக்கறை கொண்டுள்ளார். எனவே யுத்தத்;தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு சோவாலங்கா நிறுவனத்தின் உதவியுடன் தலா 4.5 இலட்சம் பெறுமதியான படகு மற்றும் இயந்திரங்கள் 40 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதனை வைத்து உங்கள் வாழ்வாதராத்தையும் உங்கள் தொழிலையும் மேம்படுத்துவது உங்கள் கைகளிலே தங்கியுள்ளது. யுத்தத்திற்கு பின் மக்கள் தங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர். அவர்;களின் வாழ்வாதாரம், வீடுகள், காணிகள் போன்றவை இன்னமும் சீர்செய்யப்படாமல், வாழ்வில் மேலும் கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சோவாலங்கா நிறுவனத்தில் இணைப்பாளர் குமர நவரட்ணா மற்றும் யாழ்.மாவட்ட இணைப்பாளர் எச்.கண்ணன், வடமாகண ஆளுநரின் செயலாளர் எச்.இளங்கோவன், மீன்பிடி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், மருதங்கேணி பிரதேச செயலர் எ.திருலிங்கநாதன் மீனவர்கள் பிரதிநிதிகள், அப்பகுதி மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.