சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – அங்கம் 2 சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – அங்கம் 2

 

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக்குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

– வணக்கம்LONDON –

A 9 வீதியில் கிளிநொச்சி நகருக்கு சில கி.மீ தொலைவில் திருமுருகண்டி வணக்கஸ்தலம் அமைந்திருக்கின்றது. அங்கிருந்து மேற்கு நோக்கி காட்டுப் பகுதிகளின் ஊடாக நகரும் பாதையில் சுமார் 12 கி.மீ இல் அக்கராயன் பிரதேச வைத்தியசாலையும் 25கி.மீ இல் வன்னேரி மத்திய மருந்தகமும் 40 கி.மீ தூரத்தில் ஜெயபுரம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் அமைந்திருக்கின்றது. மேலும் 10 கி.மீ தூரம் பயணித்தால் மன்னார் யாழ்ப்பாண  A 32 வீதியில் முழங்காவில் பிரதேச வைத்தியசாலையை அடைய முடியும்.

வன்னேரிக்குளம் சந்தியில் முற்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சுமைதாங்கி கல் காணப்பட்டது. எனினும் பின்னர் அதனை சிலர் தகர்த்து விட்டனர்.

கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் இராணுவ நடவடிக்கை வலுப்பெற இப் பகுதியினூடாக படிப்படியாக மக்கள் கிளிநொச்சி நகரத்தை இந்த வைத்தியசாலைகளை ஆதாரமாகக் கொண்டு வந்தனர்.

as3

இராணுவ முன்னேற்ற நடவடிக்கைகள் மன்னார் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் இயங்கிய அடம்பன் பிரதேச வைத்தியசாலை, பள்ளமடு கிராமிய வைத்தியசாலை என்பன அதன் சேவைகளை வெள்ளாங்குளம் மத்திய மருந்தகத்திற்கு நகர்த்தி இருந்தது. அவ்வாறே மடு பிரதேச செயலர் பிரிவில் இயங்கிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையும் இரணை இலுப்பைக்குளம் மத்திய மருந்தகமும் அதன் உபகரண மருந்துகளோடு வெள்ளாங்குளம் பகுதிக்கு சேவையை நகர்த்தி இருந்தது. டாக்டர்.வெற்றிநாதன் பொறுப்பு வைத்திய அதிகாரியாக மேற்படி வைத்தியசாலைகளின் சேவைகளை ஒழுங்குபடுத்தியதுடன் இரவு பகலாக கடமையாற்றியிருந்தார்.

2008 வைகாசி காலப்பகுதியில் வெள்ளாங்குளம் வைத்தியசாலையில் சேவையைத் தொடர்ந்தவண்ணம் இருக்கையில் 2008 ஆனி நடுப்பகுதியில் வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து ஊழியர்களையும், மருந்துப் பொருட்களையும் நகர்த்தி முழங்காவில் வைத்தியசாலை சேவைகளோடு இணைத்துக்கொண்டனர். பிரதேச வைத்தியசாலையாக இயங்கிய முழங்காவில் வைத்தியசாலையின் தேவைகள் அதிகரிக்கத் தொடங்கியதுடன் பல நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி வைத்திய தேவைக்காக வந்தனர். புதிதாக தற்காலிக விடுதிகள் இரண்டு கட்டப்பட்டிருந்தது.

2005ம் ஆண்டு காலப்பகுதியில் டாக்டர். பிறைற்றன் அவர்களும் அவரது துணைவியார் டாக்டர்.திருமதி. றிமதி அவர்களும் முழங்காவில் வைத்தியசாலையில் கடமைகளை பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி இருந்தனர். வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தி மக்களுக்கு உரிய வைத்திய சேவைகளை இரவு பகலாக வழங்கி இருந்தனர். சுமார் 1 1/2 வருடங்களின் பின்னர் இவர்களிடம் இருந்து டாக்டர். பாஸ்கரன் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2007, 2008 காலப்பகுதி கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் வைத்திய சேவை வழங்குவதில் மேலும் பல சிரமங்களையும், சவால்களையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. முக்கியமாக வைத்தியசாலைக்கு தேவைப்படுகின்ற மருந்துப்பொருட்கள், உபகரணங்கள், ஏனைய பொருட்கள் ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பின்னரே கொண்டுவரக்கூடியதாக இருந்தது.

as2

2008 ஆரம்ப காலப்பகுதியில் முன்னர் வவுனியா பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முழங்காவில் வைத்தியசாலைக்கு 25 KVA மின்பிறப்பாக்கி வவுனியாவில் இருந்து எடுத்துச் செல்ல அனுமதியைக் கேட்டேன். அப் பகுதியில் இராணுவ நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதால் அதனை எடுத்துச்செல்ல முடியாது என கூறினார். இருப்பினும் வைத்தியசாலையிலிருந்த பழைய மின்பிறப்பாக்கயினையும் நீர்ப்பம்பியினையும் மீள திருத்தி பாவிப்பதே வழமையாக இருந்தது. வைத்தியசாலை ஊழியர் “சூட்டி” என்பவர் வைத்தியசாலையின் எந்தத் தொழிலையும் செய்யக்கூடிய நிலையில் இருந்ததைக் கண்டேன். மிகச் சிக்கலான நிலைகளில் இவ்வாறான பல் துறை சார்ந்த ஊழியர்களின் உதவியினால் கடமைகள் நிறைவேற்றப்பட்டன. தினசரி பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு சிகிச்சையளித்த மேற்படி வைத்தியசாலை 2008 ஆடி நடுப்பகுதியில் அதன் சேவைகளை வேறு இடங்களுக்கு நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இடம்பெயர்வுகளில் இறுதியாக நகர்த்தப்படும் சேவை மருத்துவ சேவையாக இருந்தது.

 

தொடரும்……..

 

dr.sathy   வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

முன்னைய அங்கங்கள்…….

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

ஆசிரியர்