சிறிலங்காவைக் கைவிட்டது இந்தியா – ஜெனிவாவில் உதவ மறுப்புசிறிலங்காவைக் கைவிட்டது இந்தியா – ஜெனிவாவில் உதவ மறுப்பு

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்து விட்டதாக என்கொனமிக் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாத இந்திய மத்திய அரசு இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை புதுடெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன் போது, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில் அனைத்துலக விசாரணை கோரப்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு மன்மோகன் சிங் அரசாங்கம் உதவ வேண்டும் என்று பீரிஸ் கோரியிருந்தார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் மனோநிலையில் இருந்த சல்மான் குர்ஷித் இதற்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேவேளை, வொஷிங்டனுடனேயே இது பற்றி நேரடியாகப் பேசிக் கொள்ளுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிசுக்கு ஆலோசனை கூறியுள்ளார். இந்த தீர்மானம் தொடர்பாக புதுடெல்லி சரியான நேரத்தில் முடிவெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்த நேரத்தில் கொழும்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் தமிழ்நாட்டில் உணர்வுபூர்வமான விவகாரமான இது, அங்கு கூட்டணி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலேயே இலங்கையுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதாகவும் எக்கொனமிக் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. அதே வேளை, சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையுடன் கூட்டாளியாக இருப்பதற்கும் இந்தியா விரும்புவதாகவம் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்