March 24, 2023 3:13 am

நீண்ட நோக்கோடு திட்டமிட்டு செயற்பட்டால் விவசாயிகளும் வாழ்வில் வெற்றியடையலாம். விவசாயி ஒருவரின் அனுபவப் பகிர்வு.நீண்ட நோக்கோடு திட்டமிட்டு செயற்பட்டால் விவசாயிகளும் வாழ்வில் வெற்றியடையலாம். விவசாயி ஒருவரின் அனுபவப் பகிர்வு.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

சிந்தனைகளும் சிறப்பியல்புகளும் | ஒரு அனுபவசாலியின் சிந்தனைத்துளிகள்- 2

 

விவசாயிகளும் இடத்திற்கும் காலநிலைகளுக்கும் ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டால் தோல்வியின்றி வெற்றிப்பாதையில் பயணிக்கலாம் எனக் கூறுகிறார் ஒரு விவசாயி. தனது 40 வருடகால விவசாயத்தொழில் அனுபவத்தின் மூலம் தான் பெற்ற வெற்றிகளையும் பயன்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் விரும்புகின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் கந்தையா நாகராசா என்ற விவசாயி இரு பயிர்ச்செய்கைகளில் தன் புதிய முயற்சிகளை பரீட்சித்துப் பார்த்துள்ளார். அதன் மூலம் அவர் வெற்றிகண்டு நிறைவான லாபத்தைப் பெற்றுள்ளார். தன் பட்டறிவால் பெற்ற அனுபவங்களை யாழ் ஓசை ஊடாக விவசாயப் பெருமக்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்.

நான் ஒரு விவசாயி. நெல் உற்பத்தியே எனது பிரதான தொழில். இதில் எனக்கு 40 வருடகால அனுபவம் உண்டு. தென்னை உற்பத்தியும் உண்டு. எனது பகுத்தறிவினாலும் பட்டறிவுச் சிந்தனையாலும் விவசாயத்தில் இரு விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுத்தி அதில் வெற்றிகரமான இலாபத்தையும் கண்டேன். இவ்விடயங்களை என் போன்ற ஏனைய விவசாயத் தோழர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றேன். இதனால் அவர்களும் பயன் அடையவேண்டும் என விரும்புகிறேன்.

• மேட்டு நில நீர் முகாமைத்துவமும் அதன் பலனும்.

• பூச்சி நாசினிகள் பயன்படுத்தாமல் நெல்லை, நீண்ட காலம் பூச்சித் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி?

இவை இரண்டும் எனது முதலிலும் முயற்சியிலும் ஆய்வு செய்து வெற்றி கண்டு பயன் அடைந்தபடியால் இதைப்போல் ஏனையவர்களும் பயன்பெற வேண்டுமென விரும்புகிறேன்.

 

1. மேட்டு நிலமும் நீர் முகாமைத்துவமும் அதன் பலனும்

எனது பிரதான தொழில் நெல் உற்பத்தியாக இருந்தாலும் பல வருடத்திற்கு முன் சிந்தித்தேன் நான் ஒரு பட்டதாரி இல்லை. எனக்கு பிற்காலத்திற்கு ஓய்வு ஊதியம் கிடைக்காது. இதனால் பிற்காலத்தில் யாரிடமாவது கையேந்தும் நிலை வரலாம். நான் பிற்காலத்தில் உடல் கஷ்ரம் இல்லாமல் இருந்து சாப்பிடக் கூடிய வகையில் ஏதாவது நீண்டகால வருமானம் ஈட்டும் தொழிலைச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அதில் உதயமானதே தென்னை உற்பத்தி. அதற்கான இடத்தைத் தேடிப்பிடித்து உற்பத்தி செய்ய அன்று பணவசதி இல்லை. நீர்ப்பாசன வசதிகளற்ற மேட்டுநிலம்தான் என்னிடம் இருந்தது. 1975 ஆம் ஆண்டளவில் 03 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிர் செய்கையை மேற்கொண்டேன். அப்போது மழை நிறைவாகக் கிடைத்ததால் தென்னை சிறு பயிராக இருக்கும்போது நன்றாக செழிப்பாக வளர்ந்தது. பின் காய்க்கத் தொடங்கியதும் பெரு நட்டத்தை எதிர் நோக்கினேன். குரும்பைகள் கோடைகாலத்தில் உதிர்ந்து கொட்டத் தொடங்கின. செழிப்பும் குன்றியது. மழையும் குறைந்து போனது. மாரிகாலத்தில் பெய்யும் மழை நீரைச் சேமிக்க வேண்டும் என்ற சிந்தனை எனக்குத் தோன்றியது. உடனே செயலில் இறங்கினேன்.

எனது காணியில் ஒன்றுக்கும் பயன்படுத்த முடியாத ……. நிலப்பரப்பு இத்தென்னங்காணியை அண்டி இருந்தது. அக்காணியில் சுமார் ஓர் ஏக்கர் பரப்பளவை நீர் நிலையாக்கி சிறிய குளமாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றியும் அடைந்தேன். அக்குளத்தில் மாரிகாலத்தில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்கத் தொடங்கிய பின் தென்னைகளும் நன்றாக பலன் தரத்தொடங்கின. அதற்குக் கீழ் இரண்டு ஏக்கர் நிலத்தைப் பண்படுத்தி நெல் உற்பத்தியையும் மேற்கொண்டேன்.

தென்னையை அண்டி குழி போட்டு நீரைச் சேமிப்பது எல்லா இடங்களிலும் நீர்த்தேக்கம் அமைப்பது சாத்தியமானதல்ல. நான் நீர்த்தேக்கம் அமைத்து செயல்பட்ட அதே நேரம் தென்னைகளைப் பாதிக்காதவாறு வேறு ஒரு திட்டத்தையும் செயற்படுத்தினேன்.

ஒரு தென்னையின் அடிப்பாகத்திலிருந்து 6 அடி தூரத்தில் 3 அடி அகலம் 3 அடி ஆழத்தில் ஓர் மரத்தில் அரைச்சுற்று வட்டத்திற்கு குழி அமைத்து மாரிகாலத்தில் பெய்யும் மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீராக மாற்றினேன். அதேநேரம் அத்தென்னைக்கு செயற்கை உரம் போடாமல் இயற்கைப் பசளையை இட்டுப் பயன்பெறும் முயற்சியிலும் ஈடுபட்டேன். எவ்வாறெனில் அக்காணியில் சேரும் கழிவுப் பொருட்களை தீ வைத்து எரித்தழிக்காது அக்கழிவுகளையெல்லாம் அக்குழிகளில் இட்டு உக்கச் செய்து மீண்டும் தென்னைக்கு உணவாக்கும் முறைமையை நடைமுறைப்படுத்தினேன். தற்போது எனது நீர் தேக்கதேவை பூர்த்தியாகும் வரை வீதியில் சென்று வீணே கடலில் கலக்கும் நீரையும் உள்வாங்கும் செயற்திட்டத்தையும் மேற்கொள்ள உத்தேசித்தேன். அத்திட்டம் தற்போது செயற்பாட்டில் உள்ளது.

 

2. பூச்சி நாசினி எவையும் பயன்படுத்தாமல் நெல்லை, நீண்ட காலம் பூச்சித் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி?

கிருமிநாசினி பாவிக்காமல் நீண்டகாலம் பாதுகாக்கும் முறையில் எனக்கு 30 ஆண்டு கால அனுபவம் இருந்தாலும் நெல்லை பூச்சித் தாக்கத்திலிருந்து பாதுகாக்க இரசாயன நச்சுப்பீடை நாசினிகளை பயன்படுத்தியே வந்தேன். அப்படி நச்சுப் பீடை நாசினிகளைப் பயன்படுத்தினாலும் முழுமையான பாதுகாப்பைப் பெற முடியவில்லை. தொழிலில் இருந்து ஒதுங்கும் முடிவை எடுத்த காலத்தில் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டேன்.

இயற்கையைக் கொண்டே இயற்கையை வெல்வது முன்பு வேப்பம் இலை போட்டு நெல் சேமித்தால் நெல்லைப் பாதுகாக்கலாம் எனக் கேள்விப்பட்டேன். செய்தும் பார்த்தேன். இந்த முறையினைக் கொண்டு நீண்டகாலம் நெல்லைப் பாதுகாப்பது கடினம். அதில் பூரண வெற்றியும் என்னால் காணமுடியவில்லை. எனது காணியில் மிகப்பெரிய நொச்சி மரம் உண்டு. அதன் கிளைகளை அகற்றித் துப்பரவு செய்தபோது அதன் மணம் எனது மனதையும் சிந்தனையையும் ஈர்த்தது. 2010 – 2011 காலபோக அறுவடையில் எனக்குக் கிடைத்த நெல் 77 மூடைகள். அதை இருப்பில் வைக்கும்போது அட்டிக்கு அட்டி நொச்சி இலைக் கொப்புகளை போட்டு நெல்லைக் காற்றோட்டம் கிடைக்கக் கூடியவகையில் அடுக்கி வைத்தேன். 10 மாதங்களின் பின் நெல்லை விலைக்கு கொடுக்கும்போது 76 மூடைகள் தேறியது. அந்துப்பூச்சியோ வண்டையோ காண முடியவில்லை. 100 மூடைகள் சேமிக்க கட்டு நொச்சி இலை போதும். நொச்சி மரத்தை கதியால் போன்று வெட்டி கோடைகாலத்தில் நீர் ஊற்றித் தழைக்கச் செய்தும் உருவாக்கலாம். சூடு வைத்து அடிக்காமல் மெஷினால் வெட்டி உடன் அடிக்கும் நெல்லையும் காயப் போடாமல் இருப்பில் போடலாம்.

நாங்கள் முன்பு ஆட்களைப் போட்டு அருவி வெட்டி உப்பட்டியை நன்கு காயவிட்டு சூடுவைத்தே சூடு அடிப்போம். இன்று அப்படிச் செய்ய முடியவில்லை. இன்று உடன் மெஷின் மூலம் வெட்டி அடித்து மூடை ஆக்கியே நெல் உற்பத்தி செய்கிறோம். இப்படி அறுவடை செய்யும் நெல்லை இருப்பில் நீண்டகாலம் போடலாமா என எனக்கு எழுந்த ஐயத்தைப் போக்க சிறு தொகை நெல்லை (18 மூடைகள்) காயப்போடாமலே இருப்பில் போட்டேன். 09 மாதம் கழித்துப் பார்த்த போது அதில் சேதத்தைக் காணமுடியவில்லை. கொட்டிக் காயப்போடாமல் இருப்பில் போடும் நெல் அறுவடை செய்யும்போது நன்று விழைந்து நெல் கதிர் தண்டுகள் நன்று காய்ந்து இருக்க வேண்டும். வெயில் நேரத்தில் அறுவடை செய்த நெல்லாக இருக்கவேண்டும். எவ்விதமான ஈரமான அடையாளங்கள் இருக்கக் கூடாது. மேற்படி விடயங்களை அவதானித்து தரமான விளைந்த நெல்லை இயந்திரம் மூலம் அறுவடை செய்தாலும் காயப்போடாமல் இருப்பில் போடலாம்.

இம்முயற்சிகள் யாவும் சுயசிந்தனையும் சுயசெயற்பாடுமே ஆகும். நான் அடைந்த இலாபகரமான இம்முயற்சியில் கிடைத்த வழிமுறைகள் என்னோடு அழிந்து விடாமல் எமது விவசாய இனத்திற்குப் பயன்படும் என்ற நோக்கில் தான் இதைத் தந்துள்ளேன். யான் பெற்ற பயனைப்பெறுக இவ்வையகம் என்றார் விவசாயி நாகராசா.

 

 

நன்றி : யாழ் ஓசை | தொகுப்பு சியா 

 

 

[கிளிநொச்சியில் வசிக்கின்ற விவசாயியான க. நாகராசா அவர்களுடனான சில நிமிட பகிர்வு. சிறுபிராயத்தில் ஏழ்மையில் இருந்து விடுபட தனது பிறந்த ஊரான சாவகச்சேரியில் உள்ள சரசாலையில் இருந்து சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி பிரதேசத்துக்கு கனவுகளுடன் வந்த ஒரு இளைஞன்.

படிக்கவேண்டுமென்ற ஆசையை மனதுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு வாழ்வாதாரத்துக்காக உழைக்கவேண்டிய தேவை. நெஞ்சுக்குள் சுமந்துகொண்டு வந்த அந்த கனவுகளை தனது பிள்ளைகளிடம் நனவாக்கிய பெருமிதம். மூச்சுக்கு நூறு தடவை தன்னால் முடியுமென நம்புகின்ற நெஞ்சுரம்.

வெறும் கையுடன் வன்னி வந்தவரை வாரியனைத்துக்கொண்டது அந்த மண். கட்டுத்தறி பிடித்த கை மெல்ல மெல்ல ஏர் பிடித்தது. காடுகளை களனிகளாக்கி, களனிகளெங்கும் நெல்மணிகளை விளைவித்தவர் இந்த பிரபஞ்சத்தை புயலென கடந்தார். அனுபவம் அவர் நாடி நரம்பெல்லாம் பாய்ந்தது.]

 

தொடர்பான முன்னைய பதிவு 

http://www.vanakkamlondon.com/k-naagarasa-270114/

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்