வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் வரையில் தமிழ் மக்கள் போராடுவார்கள் ஜனாதிபதியின் விருப்பமும் இதுவென்பது தெளிவாக தெரிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வட மாகாணம் இன்று இராணுவத்தின் கோட்டையாக மாறிவிட்டது. ஏனைய மாகாணங்களைப் போல் வடக்கு இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
வடக்கில் இருந்து இராணுவம் விலக்கப்படமாட்டாது என்ற ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராட வேண்டும் என்பதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் விருப்பமாக உள்ளது. அதனால் தான் யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்தும் இன்றும் வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றாது உள்ளனர். தமிழ் மக்களை அடக்கி வைப்பதற்காகவே அரசாங்கம் வித்தியாசமாக காரணங்களை சொல்லி வருகின்றனர். மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகப்போவதோ தீவிரவாதம் பரவவோ எந்தவொரு சாத்தியமும் இல்லை.
வடக்கில் இருந்து 70 முகாம்கள் அளவில் அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால் அகற்றப்பட்ட சிறிய முகாம்கள் அனைத்தும் இன்று பெரிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் இருந்த இராணுவத்தையும் இன்னும் அகற்றவும் இல்லை.
இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களைப் போலல்ல வடமாகாணம். வடக்கு இன்று இராணுவத்தின் கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள இராணுவத்தில் முக்கால்வாசிப் பேர் வடக்கிலேயே உள்ளனர். அவர்களின் ஆக்கிரமிப்பிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம்.