பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள பொது நலவாய அமைப்பின் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்ச பங்கேற்கமாட்டார் என்று தெரியவந்துள்ளது என்று பிரிட்டன் ஊடகமான “இன் சைட் த கேம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதம் 23 ஆம் திகதி பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் கிளாஸ்கோ நகரில் ஆரம்பமாகவுள்ளன. பொதுநலவாய அமைப்பின் தலைவராகத் தற்போது இலங்கை ஜனாதிபதி பதவி வகிப்பதால் அவரும், பிரித்தானிய மகாராணியும் இணைந்து இந்த விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயினும் இலங்கை ஜனாதிபதி கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் அதிதியாக கலந்து கொள்வதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சர்ச்சைக்குரிய தலைவராக மாறியுள்ள மஹிந்த ராஜபக்ச, இந்த விழாவில் பங்கேற்பது குறித்துக் கவலை தெரிவித்து பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கிற்கு இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முதலாவது கடிதத்தை தொழிற்கட்சியை சேர்ந்தவரும், நிழல் வெளிவிவகார அமைச்சருமான டக்ளஸ் அலெக்சாண்டர், கடந்த 9 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி பங்கேற்பதால், இந்த விளையாட்டு நிகழ்வு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க என்ன திட்டங்களை பிரித்தானிய அரசு வைத்துள்ளது என்று அறியத் தாம் விரும்புகின்றார் என்று அந்தக் கடிதத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மஹிந்த ராஜபக்ச இந்த நிகழ்வில் பங்கேற்றால், கிளாஸ்கோ தெருக்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குப் பொலிஸ்துறை தயார்ப்படுத்தப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை, நேற்றுமுன்தினம் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பாகவும் மற்றொரு கடிதம் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதங்கள் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால், எதிர்பார்க்கப்படுவது போலவே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நிகழ்வில் பங்கேற்காது போனால், ஏற்பாட்டாளர்களுக்குப் பெரும் நிம்மதியாக இருக்கும். அவர்களின் கவலைகளில் ஒன்று குறையும் என்றும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.