இலக்கிய நூல்களும் பதிப்பகங்களும் | பங்களிப்பு மீதான வரலாற்றுப் பார்வை : முல்லை அமுதன் இலக்கிய நூல்களும் பதிப்பகங்களும் | பங்களிப்பு மீதான வரலாற்றுப் பார்வை : முல்லை அமுதன்

ஈழத்து படைப்பாளர்களின் அபரிமிதமான வருகையும், அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பிரசுர களமும் விரிந்து கொண்டே செல்வதை அவதானிக்கலாம்.

பலவகை மன அழுத்தங்களுடன் வாழ நிர்ப்பந்திக்கப்படும் சமூகத்திலிருந்து முகிழ்விட்டு பிரவகித்தோடும் படைப்பாளர்களின் படைப்புக்களின் குரல்களை, எழுத்துக்களை தாங்கி பார்வைக்கு தருகின்ற, கேட்க வைக்கின்ற அச்சு, ஒலி/ஒளி ஊடகங்களும் நிறையவே வந்துவிட்டன.

கணினி வலையமைப்பும் கைகளுக்குள் வந்துவிட மின்னம்பலங்களில் பார்க்கவும், கேட்கவும் ஊடகங்கள் அதிகமாக வந்துவிட்டன.

மேலும், தங்களின் படைப்புக்களை லாவகமாக பதிவிலிடக்கூடிய தளங்களும் வசப்படிருக்கின்றன.

அந்நாட்களில் எமக்கு அது வாய்த்திருகாததால் காற்றோடுபோனவைகளுடன், கறையானுக்கும் இரையானதும்,. இயற்கை அனர்த்தங்களுடன், யுத்த சூழலும் படைப்புக்களை அழித்தபடி  தொடர்கின்றன.

பல படைப்புக்கள் அழிந்து போனதால் மீள பதிப்புக்கள் செய்யவும் வாய்ப்பில்லாது போய்விட்டது.

chennaibookfairdasfa

இருக்கும் சிலதும் படைப்பாளர்களுக்குப்பிறகு அவர்களின் குடும்பங்களின் தொடர்ச்சியான பங்களிப்பு இலக்கியத்திற்குக் கிடைகாததால் அழியும் நிலைக்கும் ஆளாகின்றன.

இந்த நிலையால் ஆர்வமுள்ள இன்றைய தேவையாளர்களுக்கு வெறுமையே கிடைக்கின்றது. ஆங்காங்கே மறுபதிப்புக்கள் கிடைத்தாலும் போதியனவாக இல்லை என்பதே வருத்தம்.

அண்மையில் உறவுக்காரரிடம் நூல் பற்றி விசாரித்த போது ஒட்டுப்பை செயும் ஒருவருக்குக் கொடுத்துவிட்டதாகசொன்னார். அவருக்கு தன் ஜீவனம் முக்கியமாகப்பட்டது. ஆனால் அந்தநூல் இன்று கிடைக்காத வாசர்களை காலம் ஏமாற்றிவிடுகிறது.

இன்று புலம்பெயர் சூழலில் படைப்புலகில் நுழைந்தவர்களின் படைப்புக்கள் நூலாக வந்து பலரிடம் சென்று சேர்கிறது. ஆனால் அதிகமான நூல்களின் வருகையின் வேகம் ஆபத்தையும் தந்துவிடுவதை உணரப்படுகிறது.

புற்றீசல் போல பதிப்பகங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இவை தரமான வாசகனை வசப்படுத்துமா என்கிற கேள்வியும் தொக்கி நிற்கின்றன. குறைந்த செலவில் அச்சிடும் வாய்ப்பு இருப்பதாலும் படைப்பாளர்களை ஈர்க்கவும் செய்வதால் நூல்களின் வருகையும் அதிகரிக்கின்றன.

அறிமுக விழாக்கள் மூலம் விட்டதைப் பிடிக்கலாம் என்கிற நினைப்பும் படைப்பாளர்களை வேறொரு திசைக்கு இட்டுச் செல்லமுனைய வைக்கும். ஒரு கட்டத்தில் வியாபாரப்பொருளாகி எழுத்தின் தரம்குறைகிற அபாயமுள்ளன.

அழகுடனும்,நேர்த்தியான கட்டமைப்புக்களுடனும் வாசகர்களை உள்வாங்கும் நோக்கத்துடனும், காலத்தால் பேசவைக்கும் திறமைகளுடனும் இருக்கிற பதிப்பகங்களும் இல்லாமலில்லை.

நாம் எழுததொடங்கிய காலத்தில் நூலை வெளியிடுவது என்பதே சிரமம் தருகிற செயல்பாடுதான்.

நாமே வெளியிட்டு, நாமே கடைகளில்கொண்டு சேர்த்து அதில் எத்தனை நூல் பழுதாகும், காசு கைக்கு வரும்/வராது. கடைக்காரர்களின் ஏமாற்று இன்றும் தொடகிறது மறுக்கமுடியாதுதான்.

chennaibookfair-1

முன்னர் சிரித்திரனின் கவின் அச்சகம், அலை வெளியீடுகள், குலசிங்கம் அவர்களின் உதயம் புத்தகசாலை வெளியீடுகள், சிறிலங்கா, ஆனந்தா, சுப்பிரமணிய, பூபாலசிங்கம் புத்தகசாலைகள், கு.வி அச்சகவெளியீடுகள், ஜோசேபாலாவின் வெளியீடுகள், மலையக வெளியீட்டகம், சாரல் பதிப்பகம், கலலைவாணி புத்தகசாலை வெளியீடுகள், தனலட்சுமி புத்தகசாலை/திருமகள் புத்தகவெளியீடுகள், கல்கின்ன தமிழ் மன்ற வெளியீடுகளைச் சொல்லலாம். இலாபநோக்கமில்லாது செயல்பட்டன.

சிறிமாவோ ஆட்சிக்காலத்து தடைகள் நல்ல நூல்கள் வெளியிட நிறுவனங்கள் முற்பட்டன. வீரகேசரி நிறுவனத்தாரின் வீரகேசரிப் பிரசுரங்கள் பல எழுத்தாளர்களை இனங்காட்டின. நிலக்கிளி, பொன்னம்மாளின் பிள்ளைகள், நன்றிக்கடன், இங்கேயும்மனிதர்கள், மூட்டத்தினுள்ளே, நெருப்பு மல்லிகை, தங்கச்சியம்மா, கங்கைக்கரை ஓரம், விடிவு கால நட்சத்திரம், கமலினி, போடியார் மாப்பிள்ளை, யுகசந்தி  இப்படிப் பலதை சொல்லிக்கொண்டே போகலாம்.

அ.பாலமனோகரன்,செம்பியன்செல்வன், வை.அஹ்மத்ட், ஜோன்ராஜன், செ.குணரத்தினம், பொ.பத்மநாதன், செங்கைஆழியான், கே.டானியல், கே.விஜயன், தி.ஞானசேகரன், மொழிவாணன், அருள். செல்வநாயகம், கே.எஸ்.ஆனந்தன், இந்துமகேஷ், அருள்.சுப்பிரமணியம் என்று பலரை பலருக்கும் இனங்காட்டியது. கலாவல்லி சஞ்சிகையை வெளியிட்ட மெய்கண்டான் நிறுவனம், மாணிக்கம்சஞ்சிகையை வெளியிட்ட மாணிக்கம் நிறுவனம் சிலநூல்களை வெளியிட்டன. நீலமாளிகை, கோத்தியின் காதல், கர்ப்பக்கிருகம், காற்றில் கலக்கும்பெருமூச்சுக்கள் எனப்பல நூல்களையும் சொல்லலாம்.

திருகோணமலையில் திருமைலைசுந்தாவின் அம்மாபதிப்பகமும், சித்திஅமரசிங்கம் அவர்களின் இலக்கியச்சோலை அமைப்பும் பலநூல்களை வெளியிட்டு வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தன.

மட்டக்களப்பில் அன்புமணி அவர்களின் மலர் வெளியீடாகாவே  செ.யோகநாதனின் ‘தோழமை என்றொரு சொல் குறுநாவல் வெளிவந்திருந்தது. மலர் சஞ்சிகை  மூலம் மேலும் பலநூல்கள் வந்திருந்தன. அதே போல் கண.மகேஸ்வரனின் தாரகை சஞ்சிகையும், உதயம் நூல் வெளியீட்டுத்திட்டத்தின் மூலம் சிலநூல்களும் வந்திருந்தன.

உதயம் வெளியீட்டகத்தாரின் நூல் வெளியீட்டுத்திடம் வெற்றி பெற்ரிருக்குமாயின் இன்னும்பலநூல்கள் வந்திருக்கலாம். எனினும் சாதித்ததாகாவே உதயம் நிறுவனத்தாரை போற்றலாம்.

அந்தனி ஜீவாவின் மலையக வெளியீட்டகமும், சாரல்நாடனின் சாரல்பதிப்பகமும் நல்ல நூல்களை தந்திர்ந்தன. கலாநிதி.மு.நித்தியானந்தன் யாழ்ப்பாணத்தில் விரிவுரையாளராக இருந்த போது வைகறை வெளியிட்டத்தின் மூலம் மூன்று நூல்களை வெளியீடு பலரையும் வியக்கவைத்தார். தோட்டக்காட்டினிலே, ஒரு.கூடைக்கொழுந்து குறிப்பிடத்தக்கன. ந.முரளிதரன், என்.எஸ்.எம்.ராமையா, தெளிவத்தை ஜோசேப், மலரன்பன், மொழிவரதன் போன்றவர்களை எமக்குஅறிமுகம் செய்துவைத்தார்கள்.

இங்கு தான் பதிப்பகங்களின் கடமை முக்கியம் பெறுகின்றன.

இப்போது மட்டக்களப்பில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நூல்களை வெளியிடுவதுடன், தமிழியல்விருதுகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசியகலை இலக்கியப் பேரவையின் நூல்கள் கணிசமான படைப்பாளர்களை இலக்கிய உலகம் பெருமைகொள்ளும் வகையில் வெளியிட்டு வருகின்றன. சிவசேகரம், முருகையன் நூல்கள் சிறபான வரவேற்பைப் பெற்றிருந்தன. அதே போல் புலோலியூர் இரத்தின வேலோனின்  மீரா வெளியீட்டகமும் தரமான நூல்களை வெளியிட்டு வருகின்றன

யாழ்ப்பாணத்தில்  விடுதலைப்புலிகளின்  கட்டுப்பாடிலிருந்தபோது  நல்ல நூல்கள் தனியாகவும், நிறுவன அமைப்புக்களாலும்  வெளிவந்தன. மீரா பதிப்பகம் மூலம்  டேவிட் லிகோரி நல்ல நூல்களை வெளியீட்டார். செங்கை ஆழியான் கமலம்வெளியீட்டகம் மூலம் தனது நூல்களையும், யாழ் இலக்கியவட்டம் மூலம் பிறரது நூல்களையும் வெளியிட்டார். கவிஞர் இ.நகராஜன், கே.வி.நடராஜன் போன்றோரை எமக்கு அறிமுகம் செய்துவைத்தன. அதே  போல புண்ணியாமீன்  தன் சிந்தனை  வட்டம்  ஊடாக நிறைய நூல்களையும் வெளியிட்டு வருகிறார்.

இப்போது ஆரோக்கியமான சுழலாஅல்லது வசதிகள்/வாய்ப்புகள் வந்ததா தெரியவில்லை. மாதம்மூன்று நூல்களாவது வருகின்றன.

புலம்பெயர்  இலக்கிய ஆர்வலர்களின்  நிதிப்பங்களிப்புடன்  நூல்கள்  வருவதும்  சிறப்புச் சேர்க்கின்றது. தையிட்டி.இராஜதுரையின்  நூல்  உதாரணம்.

தமிழகத்திலும், காந்தளகம், மித்ரா, மணிமேகலைப் பிரசுரம், த்வனி,  அலைகள், விடியல், கிரியா, காலச்சுவடு, உயிர்மை, வம்சி, நர்மதா, தகிதா, ஓவியாபதிப்பகம், அன்னம், அகரம், பல்கலை, வடலி, சாளரம், சந்தியா, விஜயாபுத்தகாலயம், வானதி, சோமு புத்தகநிலையம்,  ஆழி பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், கறுப்புப்பிரதி, புது எழுத்து, சைவ சித்தாந்த பெருமன்றம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்  என பட்டியல்நீள்கிறது.

பலர் படைப்பாளர்கள் தனித்தும் இலங்கையிலும், தமிழத்திலும் வெளியிட்டு தங்களை பதிவு செய்கின்றனர்.

ஆயிரம் நூல்கள் வரவேண்டும். ஆரோக்கியமான  சூழலினை  பதிப்பகமும்  ஏற்படுத்தல் வேண்டும். பணம் பண்ணலாம்  என்று  படைப்பாளர்களை  நோகடிப்பதும், அவர்களை  படைப்புலகம்  நோக்கிய  பயணத்தைத் திசை  திருப்பி விடுவதும்  நடந்துவிடக்கூடாதவாறு  கைகோர்த்து  பயணிக்கவேண்டும்.

எம்.டி.குணசேன  நிறுவனம், கொடகே  நிறுவனம்  நல்ல  நூல்களை  வெளியீடுள்ளன. குணசேன நிறுவனம் ஆதவன்  பத்திரிகை  மூலம்  இலக்கியப்  பங்களிப்பு  செய்தமை  வரலாற்றில் மறக்கமுடியாதது. மல்லிகைப்பந்தல்  பல நூல்களை  யாழ்ப்பாணத்திலிருந்தும், கொழும்பிலிருந்தும்  வெளியிட்டு வருகின்றமை இலக்கிய  மனங்களுக்கு  ஆறுதலான  விடயம். வீ ரகேசரிப்பிரசும் வந்த  காலத்தில் அதற்கு ஈடாக ஜனமித்திரன்  வெளியீடும் பல ஜனரஞ்சக நூல்களை  வெளியிட்டு  வாசகர்களை அணைத்துக்கொண்டது.

ஒவ்வொரு படைப்பாளனுக்குள்ளும் ஊற்றெடுக்கின்ற வகையில்தான அவர்களின் படைப்புக்களும், வெளியீடுகளும் அமைகின்றன. ஒவ்வொரு கிராமங்கள்தோறும் உருவான படைப்பாளர்களும் தனித்தும், ஒருமித்தும் வெளியிட்டு தங்களின் இருப்பை ஸ்திரபப்டுத்தியே வருகின்றனர். கோணைத்தென்றல், படிகள், வகவம், கண்டி/கொழும்பு/நாவலப்பிட்டி/கிளிநொச்சித் தமிழ்ச் சங்கங்களும் நூல்களை வெளியிட்டு எமது நூல்தேவையை, வாசகர்களின் தாகத்தை, ஆய்வாளர்களுக்கு தருகின்றமை குரிப்பிடத்தான் வேண்டும். குமரன் பதிப்பகம் பல நூல்களை வெளியிட்டு இன்றும் வரவேற்புடன் பயணிக்கின்றது. புலம்பெயர்நாடுகளில் தேசம் வெளியீட்டாளர்கள், திருமுருகன் அறிவகம், அயோத்திநூலக சேவை, தமிழியல்பதிப்பகம், ரத்தினம்பவுண்டேசன் ஈழவர் இலக்கியச் சங்கம், ஜேர்மனியில் எழுத்தாளர்சங்கம், கனடாவில் காலம் புத்தகம்,  தமிழர்தகவல், தாய்வீடு, படைப்பாளர் சங்கம், நோர்வேயில் சுவடுகள் பதிப்பகம் குறிப்பிடத் தக்கவெளியீடுகளை தந்துள்ளன. இன்னும்  நிறைய இருக்கலாம்.

அவுஸ்திரேலியாவில் முருகபூபதி போன்றோரின் வெளியிட்டு முயற்சிகளையும் குறிப்பிடவேண்டும். அவுஸ்திரேலிய எழுத்தாளர்களை ஒன்றிணைத்து வருடாந்த விழாக்கள் நடத்துவதுடனும் அவ்வப்போது தொகுப்பு நூல்களையும் வெளியிட்டு வருகின்றார். அவருடன் பல எழுத்தாளர்கள் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

அவற்றையும் நாம் பதிவிலிடவேண்டும்.

நூல்களின்  தேவை  இருக்கும்  மட்டும்  நூல்  வெளிட்டாளர்களும்  தேவையே. படைப்பாளரின்  கைகளைப் பலப்படுத்தும்  வகையில்  பதிப்பகங்களின் தேவையும்,நோக்கமும்  இணையவேண்டும்.

 

 

  mu-amu   முல்லைஅமுதன்

 

(குறிப்பு:தவறவிட்டவைகளைக் குறிப்பிடுங்கள்)

ஆசிரியர்