தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இலங்கை ராணுவத்தின் இணைய தளம் வெளியிட்ட அவதூறு செய்திகளுக்கு பலத்த கண்டனம் எழுந்ததை அடுத்து, இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது.
தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கிண்டல் செய்து, இலங்கை ராணுவ இணைய தளத்தில், கேலிச் சித்திரத்துடன் சில ஆட்சேபகரமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.இதை அறிந்த தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்டில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., பா.ஜ., – பா.ம.க., – ம.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.,க்கள், இலங்கை அரசின், செயலை கண்டித்தனர்.தமிழகத்தின் பல பகுதிகளில், இலங்கை அரசுக்கு எதிராக அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய செய்தி நீக்கப்பட்டது. இதையடுத்து, ‘அந்த இடத்தில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்’ என்ற தலைப்பில், அந்நாட்டு ராணுவம் செய்தி வெளியிட்டிருந்தது.