இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் விதிமுறைகள் மீறப்பட்டன.
எனவே போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக ஐ.நா. சபையில் இலங்கை மீது அமெரிக்கா கண்டன தீர்மானங்கள் கொண்டு வந்தது. பின்னர் ஓட்டெடுப்பில் அந்த தீர்மானமும் வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 21.02.2002 முதல் 15.11.2011 வரை நடந்த போரின் போது நடந்த குற்ற செயல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்ற செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
மேற்கண்ட கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சியாகவும், அதன் பிறகு நடைபெற்றாலும் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. புகார்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் அனுப்பி வைக்கலாம். புகார்களை வருகிற அக்டோபர் 30–ந் தேதிக்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.
அவை அனைத்தும் 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். போட்டோக்கள், வீடியோ மற்றும் ஆடியோக்களின் ஆதாரம் அனுப்பி வைக்க விரும்புபவர்கள் முதலில் மின்னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உரியவர்கள் அனுப்புவதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.