லைபீரியாவில் எபோலா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கிருக்கு தனது நாட்டு தூதரக அதிகாரிகளை நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் லைபீரியாவில் 282 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் கடந்த சில மாதங்களில், எபோலா வைரஸால் 932 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்து 1,711 பேருக்கு எபோலா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லைபீரியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து அமெரிக்க சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கர்களுக்கு உதவ சிறப்பு மருத்துவ சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறையின் நோய் தடுப்பு மையத்தின் 12 மருத்துவர்கள் மற்றும் 13 பேரிடர் சேவை உறுப்பினர்கள் குழு எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கிருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.