இந்தியாவின் 68 வது சுதந்திர தின விழா இன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.
அவர் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுவது இதுவே முதல் தடவை ஆகும். விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 7.20 மணிக்கு செங்கோட்டைக்கு வருகை தந்த நரேந்திர மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர், தேசிய கொடியை ஏற்றி வைத்தார் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விழாவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கு ஏற்ப கூடுதல் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதால் செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். செங்கோட்டை வளாகத்தை சுற்றி ஏராளமான கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதுடன் விழா நடைபெறும் போது செங்கோட்டை பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஆள் இல்லாத சிறிய ரக விமானங்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.