நேற்று அதிகாலை பாகிஸ்தானில் இரண்டு விமான நிலையங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். உயிருடன் சிக்கிய சிலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தானின், கராச்சி சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றும் நோக்கில் கடந்த ஜூன் 10ல் தலிபான் பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தினர். பல மணி நேரம் நடந்த சண்டையில் 15க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
விமான நிலையங்களை கைப்பற்றி விமானங்களை கடத்திச் சென்று எதிரி நாடுகளின் மீது தாக்குதல் நடத்து வது பயங்கரவாதிகளின் திட்டமாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையால் அந்நாட்டின் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இரண்டு விமான நிலையங்கள், நேற்று பயங்கரவாதிகளின் கைப்பற்றுதல் முயற்சிக்கு இலக்காகின. 12 கி.மீ., இடைவெளியில் உள்ள ராணுவத்தின் சாமுங்லி மற்றும் காலித் விமான தளங்கள் மீது தனித்தனியாக, ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஏவுகணை வீச்சு கருவிகள், மனித வெடிகுண்டு ஜாக்கெட் போன்ற வற்றுடன் வந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வழிமறித்து தாக்கினர். இருதரப்பினருக்கும் இடையே பல மணி நேர சண்டைக்குப் பின் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர். உயிருடன் சிலர் ராணுவத்தினரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.