இலங்கை தமிழ் கட்சிகளின் எம்.பி.,க்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் நேற்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இன்று பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினர். தமிழ் மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் மற்றும் நில உரிமை கிடைக்க வகை செய்யும், இந்தியா இலங்கை உடன்படிக்கையின், 13 ஏ பிரிவை செயல்படுத்த, இலங்கை அதிபர் ராஜபக் ஷேவை வலியுறுத்த வேண்டும் என்பது குறித்து பிரதமரிடம் எடுத்து வைக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், இலங்கையின் அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனே இடையே, 1987ல் ஏற்படுத்தப்பட்டது, இந்தியா இலங்கை உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையில், ‘தமிழர் பகுதிகளுக்கும், தமிழ் மாகாணங்களுக்கும் தனியான போலீஸ் அமைப்பு உருவாக்கப்படும்; தமிழர்களுக்கு நிலஉரிமை வழங்கப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதை அமல்படுத்த, இப்போதைய அதிபர் ராஜபக் ஷே தயாராக இல்லை. வடக்கு மாகாணத்தில், தமிழ் கட்சி ஆட்சி நடைபெற்றாலும், அங்கு போலீஸ் அதிகாரம் மற்றும் நில உரிமைகள் வழங்கப்படவில்லை.
நேற்று சுஷ்மாவை சந்தித்து பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில் , தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் வேர்கள் இருக்கிறது. எனவே தான் இவ்விவகாரத்தில் இந்திய அரசின் தலையீடு மிகவும் வலுவானதாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.