இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) தீவிரவாத அமைப்பு உலகம் முழுவதும் பரவக்கூடும், அந்த அமைப்பை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
சிரியா, இராக்கில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மிகப் பெரிய சவாலாக உருவெடுத் துள்ளனர். இந்த அமைப்பு உலகம் முழுவதும் பரவக்கூடும். அதனைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமை.
இந்த நேரத்தில் இராக் படை களுக்கும் சிரியாவின் மிதவாத எதிர்க்கட்சியினருக்கும் நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.
இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதி களுக்கு எதிராக அமெரிக்கா வான் வழி தாக்குதல் நடத்துவதால் மட்டும் அந்த அமைப்பை அழித்துவிட முடியாது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஒவ்வொரு நாடும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். ராணுவ உதவி, அகதிகளுக்கான நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை அளிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளை ஒருங்கிணைப்பது கடினம்
ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அரபு நாடுகளை ஒருங்கி ணைக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே மிக நீண்ட காலமாக பகை நீடித்து வருகிறது. இந்த நாடுகள் ஓரணியில் நிற்பது கடினம். அதேபோல் சவூதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையே மோதல்போக்கு நீடிக்கிறது.
மேலும் அமெரிக்காவின் தலையீட்டை சில நாடுகள் விரும்பவில்லை. இதனால் அரபு நாடுகளை ஒருங்கிணைப்பது மிகவும் கடினம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.