மெக்சிகோ நாட்டில் மலை உச்சியில் வெட்டப்பட்ட குழிகளில், ஏராளமான மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை, போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லுாரி மாணவர்களாக இருக்கலாம் என கருதப்படுவதால், பீதி ஏற்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் அதிகம். இந்த கும்பல்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில், நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்படுவது வெகுசாதாரணம்.கடந்த வார இறுதியில், தேர்வு எழுதச் சென்ற கல்லுாரி மாணவர்கள் சிலர், தனியார் பஸ் ஒன்றை தடுத்து நிறுத்தி, அதை ஓட்டிச் சென்றனர்.
அந்த தகவல் அறிந்த போலீசார், 43 மாணவர்களை விசாரணைக்காக பிடித்துச் சென்றனர்; அதன் பிறகு அந்த மாணவர்களை காணவில்லை.இந்நிலையில், மலை உச்சி ஒன்றில், சமீபத்தில் வெட்டப்பட்ட குழி ஒன்றில், பிணங்கள் புதைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவர்கள், போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது, அந்த உடல்கள், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் சிலர் என்பது தெரிய வந்தது.இதையடுத்து, அனைத்து குழிகளும் தோண்டப்பட்டன; ஏராளமான உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அவை, போலீசாரால் கடத்திச் செல்லப்பட்ட உடல்கள் தான் என்பதை மாணவர்களில் ஒரு தரப்பினர் உறுதிப்படுத்தினர். எனினும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் அடித்துக் கொல்லப்பட்டு, குழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என, கருதப்படுகிறது.