முழு சந்திரகிரகணமான கருஞ்சிகப்பு வண்ணத்தில் தோற்றம் கண்ட சந்திரனை ஆசியா, மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் சில பகுதிகளில் மக்கள் கண்டு களித்தனர்.
ஒரு சிலருக்கு முழு கிரகண சமயத்தில் சந்திரன் ஆரஞ்சு அல்லது சிகப்பு நிறத்தில் அதாவது ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படுவதற்கு ஏற்ப தோற்றமளித்த அரிய காட்சியைப் பார்க்க முடிந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆப்சர்வேட்டரியில் இந்த பிளட் மூன் தோற்றம் கண்டவுடன் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
சிட்னி ஆப்சர்வேட்டரி வானியலாளர் ஜெஃப் வியாட் கூறும்போது, “அற்புதமான காட்சி, மேகம் குறுக்காக வந்தது, ஆனால் முழு கிரகணத்தைப் பார்த்தோம். சிகப்பு-பிரவுன் நிறத்தில் சந்திரன் தோற்றமளித்து அருமையான காட்சி அனுபவம்” என்றார்.
ஜப்பானின் சில பகுதிகள் உயரமான கட்டிடங்களிலிருந்து சிலர் பிரவுன் நிறமாக மாறிய சந்திரனைக் கண்டு களித்தனர்.
பொதுவாக முழு கிரகணம் எனில் சந்திரன் ஒரு மாதிரியான அரைகுறை கரு நிறத் தோற்றமளிக்கும். ஆனால் இந்த சந்திர கிரகணத்தின் போது ஆரஞ்சு-சிகப்பு வர்ணத்தில் சந்திரன் காட்சியளிக்கும் என்று ஏற்கெனவே விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.