விடுதலைப் புலிகளின் வங்கியில் அடகு வைத்த நகைகள் இலங்கை அரசு மீள கையளிக்கின்றது ?விடுதலைப் புலிகளின் வங்கியில் அடகு வைத்த நகைகள் இலங்கை அரசு மீள கையளிக்கின்றது ?

இலங்கையில் தனி ஈழம் அமைக்கும் நோக்கத்தில் போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கம், தங்களுக்கு என தரைப்படை, கப்பல்படை, விமானப்படை மற்றும் ஒரு அரசாங்கத்துக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கி வைத்திருந்தது.

அதே வகையில், வங்கியியல் சேவையிலும் பலமாக காலூன்ற திட்டமிட்டு வங்கிகளை தொடங்கி, நிர்வகித்து வந்தது. அந்த வங்கியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கணக்கு வைத்து, பலனடைந்து வந்தனர்.

இந்த வங்கிகளில் பணப்பரிமாற்றம் மட்டுமின்றி, கடன் வசதி, தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறும் வசதி ஆகிய சேவைகள் வழங்கப்பட்டன. கடந்த 2008-ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்த உச்சக்கட்ட போரின்போது, இந்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட ஏராளமான தங்க நகைகளை கைப்பற்றிய இலங்கை ராணுவம், கடந்த 5 ஆண்டுகளாக அவற்றை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

உரிமை கோரப்படாத இந்த தங்க நகைகள் தொடர்பாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை ராணுவம், ’மேற்படி வங்கியில் தங்களது நகைகளை அடகு வைத்ததற்கான ஆதாரங்களை யாராவது வைத்திருந்தால், அவற்றை காண்பித்து, உரிய பணத்தை செலுத்தி, தங்களது நகைகளை மீட்டுச் செல்லலாம். இல்லையென்றால், எஞ்சியுள்ள நகைகள் இலங்கை அரசுக்கு சொந்தமான மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படும்’ என அறிவித்துள்ளது.

அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பாக, இது வரையில் 2,377 கோரிக்கைகள் தங்களுக்கு வந்துள்ளதாகவும், இவற்றில் வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தகுதிக்குரிய 25 நபர்களுக்கு சொந்தமான தங்க நகைகளை,  கடந்த வாரம் உரியவர்களிடம் அதிபர் ராஜபக்சே ஒப்படைத்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்