சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவில் துருக்கி எல்லையில் கோபன் என்ற நகரம் உள்ளது. இங்கு குர்தீஸ் இன மக்கள் அதிகமாக வசித்து வந்தனர்.
இந்த நகரை கைப்பற்றுவதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகள் சில வாரங்களுக்கு முன் தாக்குதலை தொடங்கினார்கள். அவர்கள் நடத்திய தீவிர தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிரியா ராணுவமும், குர்தீஸ் படையும் பின்வாங்கியது.
இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் நகரின் 40 சதவீத இடத்தை கைப்பற்றினார்கள். எந்த நேரத்திலும் முழு நகரமும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை தடுக்க அமெரிக்காவும், மற்ற நாட்டு கூட்டுபடைகளும் தொடர்ந்து குண்டு வீசிவந்தன. ஆனால் உரிய பலன் இல்லாமல் இருந்தது.
நேற்று போர் முறையில் மாற்றம் செய்து அமெரிக்கா அடுத்தடுத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. 18 தடவை அதிரடியாக குண்டு வீச்சு நடந்தது. அதே நேரத்தில் குர்தீஸ் படையினர் ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து தரைவழியில் போரிட்டார்கள். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஐ.எஸ்.படையினர் அங்கிருந்து பின்வாங்கினார்கள். இப்போது 20 சதவீத பகுதி மட்டுமே ஐ.எஸ். படையிடம் உள்ளது.
இது தொடர்பாக குர்தீஸ் படை தளபதி கஸ்ரா நாஜித் கூறும்போது, நாங்களும், அமெரிக்க கூட்டு படைகளும் நடத்திய தீவிர தாக்குதலால் ஐ.எஸ். தீவிரவாதிகள் பின் வாங்கி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் முழு நகரையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று கூறினார்.
நேற்று நடந்த சண்டையில் மட்டும் நூற்றுக்கணக்கான ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று இங்கிலாந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரதமர் மற்றும் அதிபர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதலை இன்னும் அதிகப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.