இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன.
இந்த நிலையில் அங்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தகவலை இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், தகவல் தொடர்பு துறை மந்திரியுமான கேஹேலிய ராம்பெக்வெல்லா தெரிவித்தார்.
கண்டியில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இலங்கை அதிபர் தேர்தல் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
அதை தொடர்ந்து தேர்தல் ஜனவரி 8–ந்தேதியில் இருந்து 10–ந்தேதிக்குள் நடைபெறும் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் கடந்த 2005–ம் ஆண்டு மகிந்த ராஜபக்சே அதிபரானார். பின்னர் 2010–ம் ஆண்டு மீண்டும் 2–வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை அரசியல் அமைப்பு சட்டப்படி அங்கு ஒருவர் 2 தடவை மட்டுமே அதிபராக முடியும். 3–வது தடவையாக தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் அதிபர் பதவிக்கு போட்டியிட வசதியாக 18–வது சட்ட திருத்தத்தை ராஜபக்சே கொண்டு வந்துள்ளார்.
அதன் மூலம் தடை நீங்கியுள்ளது. எனவே, அவரே 3–வது தடவையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றதால்தான் ராஜபக்சே 2–வது தடவை வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. சமீப காலமாக சிங்களர்கள் மத்தியில் அவரது செல்வாக்கு சரிந்து வருகிறது.
சமீபத்தில் சிங்களர் பகுதிகளில் நடந்த மாகாண தேர்தல்களில் அவரது கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை. அதே நிலை நீடித்தால் அடுத்த அதிபர் தேர்தலில் தனக்கு பின்னடைவு எற்படும் என கருதி 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் நடத்த ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது