விடுதலைபுலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் வினாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா. தற்போது இவர் இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் துணை மந்திரி ஆக பதவி வகிக்கிறார்.
இவர் இலங்கை பாராளு மன்றத்தில் பேசினார். அப்போது, இலங்கை வந்த இந்திய படை தமிழ் பெண்களை கற்பழித்தது என குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறியதாவது:–
1988–ம் ஆண்டு இந்திய– இலங்கை இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக்கு இந்திய அமைதிப்படை வரவழைக்கப்பட்டது.
அவர்கள் 1987 முதல் 1990–ம் ஆண்டு வரை இங்கு முகாமிட்டிருந்தனர். அப்போது இந்திய அமைதிப்படை வீரர்கள் பல தமிழ் பெண்களை கற்பழித்தனர். அதே நேரம் தமிழர்களையும் கொன்று குவித்தனர். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. அப்போது நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கிழக்கு பகுதிக்கு தலைவராக இருந்தேன் என்றார்.
மேலும், அவர் கூறும் போது, இலங்கை கடற்படையின் நடவடிக்கையை பாராட்டினர். இலங்கை கடலுக்குள் நுழைந்து மீன் பிடிக்க அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களிடம் இருந்து காக்க இலங்கை கடற்படை எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது.
1989–ம் ஆண்டில் 350 விடுதலைப் புலிகள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு அப்போது அதிபராக இருந்த பிரேமதாசா 5 ஆயிரம் ஆயுதங்களை கொடுத்து உதவினார். அதனால் 3 மாதத்தில் 300 பேராக இருந்த அவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் ஆக உயர்ந்தது என்று குற்றம் சாட்டினார்.
அப்போது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினர் குறுக்கிட்டு ‘‘தீவிரவாத தலைவர் (கருணா) இலங்கை சுதந்திரா கட்சியின் சீனியர் உறுப்பினர் ஆகிவிட்டார் என்றனர்.
உடனே குறுக்கிட்ட கருணா, ஐக்கிய தேசிய கட்சியினரை பார்த்து எச்சரித்தார். அப்போது, ‘‘என்மீது குற்றச்சாட்டுகளை எழுப்பினால் எதிர்க்கட்சியான உங்களை பற்றி பல தகவல்களை வெளியிட தயங்க மாட்டேன்’’ என்றார்.
2004–ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உடைத்து கருணா வெளியேறினார். பின்னர் தனி இயக்கத்தை தொடங்கிய அவர் அதை அரசியல் கட்சியாக மாற்றினார்.
அதை தொடர்ந்து ஆளும் ராஜபக்சே கட்சியுடன் கூட்டணி அமைத்து தற்போது துணை மந்திரி பதவி வகிக்கிறார். ஏற்கனவே இலங்கை சுதந்திரா கட்சியின் துணை தலைவராகவும் இவர் இருந்தார்.