பாகிஸ்தான் போலீஸ் முதல்முறையாக ‘அல்கொய்தா இந்தியா’ என்ற புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 5 பேரை கைது செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் உள்ள கெமாரி கப்பல்படை தளத்தில் இவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்து பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படையினர் அவர்களை கைது செய்தனர்.
அப்போதும் அவர்கள் வேறொரு கப்பல்படை தளத்தை தாக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் வாரி ஷாகித் உஸ்மான், ஆசாத்கான், பவாட் கான், ஷாகித் அன்சாரி, உஸ்மான், அகா இஸ்லாம் என தெரியவந்தது. இதில் ஷாகித் உஸ்மான் கராச்சியில் உள்ள அல்கொய்தா இந்தியா அமைப்பின் தலைமை கமாண்டர் என்பதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 10 கிலோ வெடிபொருட்கள், 2 எந்திர துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.