உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீடு காரணமாக, இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்த பிரதமர் மோடி அடுத்த 20 ஆண்டுகளில் செயல்படவிருக்கும் எண்ணெய் ஆய்வு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் அணு உலைகள் போன்ற இந்திய-ரஷ்ய திட்டங்களைப் பற்றி அறிக்கைகள் வெளியிட்டார்.
இந்த சந்திப்புக்கு முன்னரே, அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஜனவரி 26 இந்திய குடியரசு தின அணிவகுப்பிற்கு தலைமையேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைத்திருந்தார். இந்திய ரஷ்ய உறவால் ஒபாமாவின் இந்திய வருகை பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவி வந்தது.
இந்நிலையில், இந்தியா வழக்கம் போல் ரஷ்யாவுடன் வணிக உறவு வைத்துக்கொள்வது அதிருப்தி அளிப்பதாகவும், இதனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதென்றும் அமெரிக்க அரசுத்துறை செய்தியாளர் சாகி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.