இலங்கையில் வருகிற ஜனவரி 8–ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். நேற்று அவர் தமிழர்கள் அதிகம் வாழும் முல்லைத்தீவு பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இங்குதான் இறுதிகட்ட போர் உச்சகட்டமாக நடந்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இங்கு தேர்தல் பிரசாரம் செய்த அதிபர் ராஜபக்சே
நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். கடந்த காலத்தில் நடந்த பழைய சம்பவங்களை மறந்து விட்டு எனக்கு வாக்களியுங்கள்.
போரால் பாதிக்கப்பட்ட இப்பகுதியை மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்க என்னுடன் இணைந்து ஒத்துழைப்பு தாருங்கள் என்றார். மேலும் அவர் கூறும்போது, ‘இலங்கையில் மீண்டும் பழைய வரலாறு திரும்ப அனுமதிக்க மாட்டோம்’ என்றும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு பகுதியில் பிரசாரம் செய்த போது ராஜபக்சே சில வார்த்தைகள் தமிழில் பேசினார். கடந்த 1972 முதல் 2009–ம் ஆண்டு வரை இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்தது. அதில் 1 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. சபை கணக்கிட்டுள்ளது.
நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தமிழர்களின் 15 சதவீதம் ஓட்டுதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளது. ஏனெனில் சிங்களர்களின் ஓட்டுகள் ராஜபக்சேவுக்கும், எதிர்கட்சி வேட்பாளரான மைத்திரி பாலா சிறிசேனாவுக்கும் பிரிந்து விடும் சூழ்நிலை உள்ளது.
இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து அவரது அமைச்சரவையில் மந்திரி பதவி வகித்த மைத்திரி பாலா சிறிசேனா எதிர்பாராத நிலையில் அவரை எதிர்த்து போட்டியிடுகிறார். இது ராஜபக்சேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.