உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தன்னாட்சி அறிவித்துள்ள கிளர்ச்சியாளர்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் காணப்படாமல் இழுபறி நிலவுவதாகத் தெரிகிறது.
ரஷிய ஆதரவாளர்களான உக்ரைனின் முந்தைய ஆட்சியாளர்கள், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுற்றனர். ரஷியாவை ஆதரிக்கும் பழைய நிலைப்பாட்டைக் கைவிட்டு, ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்து செயல்படுவதென உக்ரைனின் புதிய ஆட்சியாளர்கள் தீர்மானித்தனர்.
இதற்கு ரஷிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ரஷிய ராணுவத்தின் மறைமுக ஆதரவுடன் கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் அரசுப் படையினருக்கும் சண்டை மூண்டது.
கிழக்கு உக்ரைன் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த 8 மாதங்களாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பெலாரஸ் நாடு முயற்சியெடுத்தது. இதையடுத்து, அந்நாட்டின் தலைநகர் மின்ஸ்கில் ரஷியா முன்னிலையில், கிளர்ச்சியாளர்கள் தரப்புக்கும் உக்ரைன் அரசுக்கும் இடையே பேச்சு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. இருந்தபோதிலும், சண்டை முற்றிலும் ஓயவில்லை. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் பகுதிகள் தன்னாட்சி பெற்றதாக அறிவித்து அங்கு தேர்தலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் ஏற்பட்ட உடன்படிக்கையை உறுதி செய்யும் விதமாக, மீண்டும் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டது.