இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் (க்யூ.இசட்.8501) நேற்று முன்தினம் காணாமல் போனது. விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவின் ஓரியன் விமானம் நேற்று கடலில் மிதக்கும் சில பாகங்களை கண்டுபிடித்தது.
இந்தோனேசியாவின் மத்திய கலிமந்தன் மாகாணம், பங்காலன் பன்னிலிருந்து 160 கி.மீ தூரத்தில் உள்ள நங்கா தீவு அருகில் சந்தேகப்படும்படியான பாகங்கள் மிதப்பதை இந்த விமானம் கண்டுபிடித்து படம் பிடித்தது. எனினும் அது ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள்தானா? என உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இன்று அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த இந்தோனேசிய அரசு, கடலில் மிதக்கும் பாகங்கள் காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள்தான் என்று உறுதி செய்தது. மேலும், அந்த இடத்தை நோக்கி மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாகவும் விமான போக்குவரத்து துறை டைரக்டர் ஜெனரல் தெரிவித்தார்.
விமானத்தின் பாகங்கள் கடலில் சிதறிக் கிடப்பதை இந்தோனேசிய அரசு உறுதி செய்ததால், அதில் பயணம் செய்த பயணிகள் இறந்திருக்கலாம் என்ற அச்சத்தில் விமான நிலையத்தில் காத்திருந்த அவர்களின் உறவினர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுது புலம்பினர்.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு சென்ற இந்தோனேசிய மீட்புக் குழுவினர் அங்கு மிதக்கும் உடல்களை மீட்டு வருகின்றனர். அரை நிர்வாண நிலையில் உடல்கள் மிதக்கும் புகைப்படத்தை அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டது. ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து, கயிறு மூலம் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.