‘கருணையே நோக்கம்’ என்பதை வலியுறுத்தும் விதமாக, ஆசிய நாடுகளில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை போப் பிரான்சிஸ் நேற்று தொடங்கினார்.
தனது பயணத்தின் முதல் கட்டமாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள அவர், நாளை கடற்கரையில் நடைபெறும் திறந்த வெளி கூட்டத்தில் உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறார். அந்நாட்டில் 40 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போர் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவடைந்ததை தொடர்ந்து முதல் முறையாக போப் அங்கு வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனா, ‘சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும்’ என்று உறுதியளித்துள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.
தனது இலங்கை பயணத்தில், தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு பகுதியில் உள்ள மிகப்பழமையான தேவாலயம் ஒன்றிற்கும் போப் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்லும் போப், அங்கும் திறந்த வெளி பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.