கருணையே நோக்கம்’ என்பதை வலியுறுத்தும் விதமாக, ஆசிய நாடுகளில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தொடங்கினார்.
முதல் கட்டமாக மூன்று நாள் பயணமாக இலங்கை வந்து சேர்ந்து அவரை கொழும்பு விமான நிலையத்தில் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வடக்கு மாகாணம், மன்னார் மாவட்டத்தின் மடு அன்னை ஆலயத்திற்கு இன்று போப் செல்கிறார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட ரணங்களுக்கு தீர்வு காணும் விதமாக, இனப்படுகொலைக்கு நீதி பெற்று தரவேண்டும், அரசியல் தீர்வுக்கு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று போப்பிடம் ஈழத்தமிழர்கள் கோரிக்கை வைக்க உள்ளனர். நேற்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற அமைதி வழி அறப்போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் மக்கள், தமிழர் தாயகப் பகுதியில் இலங்கை ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆள் கடத்தல்கள், தடுத்து வைப்புகள், கைதுகள், படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள், சூறையாடல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு நீதிகேட்கும் பதாதைகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது அவர்கள் அனைவரும் மடு அன்னை ஆலயத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் போப்பை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.