இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது, ஆட்சியில் நீடிப்பதற்காக, அதிபராக இருந்த ராஜபக்சே ராணுவ புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. தனது தம்பி கோத்தபய ராஜபக்சே, தலைமை நீதிபதி மோகன் பெரீஸ், மந்திரியாக இருந்த ஜி.எல்.பெரீஸ் உள்ளிட்டோருடன் இதற்காக ராஜபக்சே ஆலோசனை நடத்தியதாக, இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா, நேற்று குற்ற புலனாய்வு துறையிடம் (சி.ஐ.டி.) புகார் அளித்தார். ‘இது கடுமையான விவகாரம் என்பதால், விசாரணை நடத்தப்பட அரசு விரும்புகிறது’ என்று அவர் கூறினார்.
இந்த புகாரின் பேரில், மங்கள சமரவீராவிடம் வாக்குமூலம் பதிவு செய்ததுடன், விசாரணையை தொடங்கி இருப்பதாக போலீஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.