ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டால் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன் இணைந்து அவர் வெள்ளிக்கிழமை பேசுகையில் தெரிவித்ததாவது:
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது. அந்த நாட்டின் மீது மேற்கத்திய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள சந்தேகம் இன்னும் தீர்ந்தபாடில்லை.
கடந்த காலங்களில் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ரகசியமாக ஈடுபட்டு வந்தது.
அந்த நாட்டுடன் நமக்கு ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன.
எனினும், தற்போது அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தால் அந்தப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்படும்.
மேலும், ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால உடன்படிக்கையின்படி, அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது.
எனவே, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, எனது ஒப்புதலுக்குக் கொண்டு வரப்பட்டால் நான் அதனை நிராகரிப்பேன் என்றார் ஒபாமா.