கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. இந்த தாக்குதல்களை அதிகரிக்க ஆயுதம் வழங்குமாறு உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோஷெங்கோ, அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். இதை ஏற்று உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. எனினும் இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் உக்ரைனுக்கு, அமெரிக்கா ஆயுதம் வழங்கக்கூடாது என ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளன. இது தொடர்பாக பிரஸ்சல்சில் நடந்த இந்த நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து ஜெர்மனி மந்திரி ஊர்சுலா கூறுகையில், ‘அதிகப்படியான ஆயுதங்களால் இந்த பகுதியில் ஒரு தீர்வை உருவாக்க முடியாது. போரினால் அவதிப்படும் அப்பகுதி மக்களுக்கு இதன் மூலம் எந்த விடிவும் பிறக்காது’ என்றார்.
கிளர்ச்சியாளர்களுக்கும், ரஷியாவுக்கும் பொருளாதார, அரசியல் ரீதியான அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று கூறிய அவர், அங்கு அதிகமான ஆயுதங்களை குவித்தால் பிரச்சினைதான் பெரிதாகும் என்று தெரிவித்தார். இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் மந்திரிகளும் இதே கருத்தையே கூறியுள்ளனர்.