பாகிஸ்தானின் சிறுபான்மை ஷியா பிரிவினரின் மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்க்வா மாகாணத் தலைநகர் பெஷாவரில் அமைந்துள்ள இமாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்காக ஏராளமானோர் குழுமியிருந்தனர்.
அப்போது உடலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுடன் மூன்று பயங்கரவாதிகள் அங்கு நுழைந்தனர்.
அவர்களில் ஒருவர் தன் உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததாகவும், மற்றொருவர் குண்டு வெடிப்பதற்கு முன்பாகவே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் “டான்’ நாளிதழ் தெரிவித்தது.
மூன்றாவது நபர், காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்தது.
தற்கொலைப் படையினரின் உடல்களில் வெடிக்காத நிலையிலிருந்த அந்த இரு வெடிகுண்டுகளையும், நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
சம்பவ இடத்தில் மூன்று வெடி சப்தங்களும், அதைத் தொடர்ந்து துப்பாக்கி சப்தங்களும் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்; 50 பேர் காயமடைந்தனர்.
இரு வாரங்களுக்கு முன்பு சிந்து மாகாணத்திலுள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 61 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம் பிரிவினர் மீது நிகழ்த்தப்படும் மிக மோசமான தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.