இந்தியா உள்பட நூறுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து இராக், சிரியாவில் போரிட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறினார்.
வாஷிங்டனில், பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பேசும்போது அவர் தெரிவித்ததாவது: ஐ.எஸ்.ஸில் இணைந்து, இராக், சிரியாவில் சண்டையிடுவதற்காக, முன்னெப்போதையும் விட, அதிக அளவில் ஆட்கள் செல்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
இராக், சிரியாவில் சண்டை தொடங்கியது முதல், நூறுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்றுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஐ.எஸ்.ஸில் இணைந்து சண்டையிட இந்தியாவிலிருந்தும் சென்றுள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுமார் 4,000 பேர் இராக், சிரியாவில் சண்டையிட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் 1980-களில் சண்டை நடைபெற்றபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20,000 பேர் அங்கு சண்டையிடச் சென்றனர். ஆனால் அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கு பத்து ஆண்டு காலமாயிற்று.
இப்போது, 3-4 ஆண்டுகளிலேயே, சிரியா, இராக்கில் சண்டையிட்டு வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்டுவிட்டது.
உலக அமைதிக்கும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் விதமாக, 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒன்றிணைந்த திட்டத்தை உருவாக்க அமெரிக்கா முயன்று வருகிறது என்று ஜான் கெர்ரி கூறினார்.