பொருளாதார, நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைவகுப்பு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டக்குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நிதி நெருக்கடிக்கு உரியவாறான தீர்வைக் கண்டறிவதை முன்னிறுத்திய ஆரம்பகட்டக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், இதன் தொடர்ச்சியாக இரண்டாம் சுற்றுக்கலந்துரையாடல்களை நாளைய தினம் (26) நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி செயற்திட்டம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான முதற்கட்ட நகர்வாக ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் பீற்றர் ப்ரூபர் மற்றும் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு நேற்றைய தினம் (24) நாட்டை வந்தடைந்துள்ளது.

அதன்படி இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவையும் சந்தித்த அக்குழு, நாட்டின் நிதி உறுதிப்பாடு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள், பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
அதேவேளை மத்திய வங்கியின் உயரதிகாரிகள் உள்ளடங்கலாக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் பலருடனும் சந்திப்புக்களை நிகழ்த்தவுள்ள இக்குழு, நாட்டின் வணிகத்துறைசார் முக்கிய தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரையான 8 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பதற்குத் தீர்மானித்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்டக்குழுவானது, தமது உயர்மட்ட சந்திப்புக்களின் முடிவில் இருதரப்பிற்கும் இடையில் ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை அடைந்துகொள்வது குறித்து அறிக்கையொன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், அதனை அடிப்படையாகக்கொண்டு கடன் மீள்செலுத்துகை விடயத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளியகக் கடன் வழங்குனர்களுடனான கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், அதனைத்தொடர்ந்து இவ்வருட இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார உதவி செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.