December 7, 2023 12:40 am

மோடியை ஒன்றாகச் சந்திக்க முயற்சிப்போம்! – தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு விக்கி அழைப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஒன்றாகச் சென்று சந்திக்கும் முயற்சியை மேற்கொள்வோம் வாருங்கள். அவர் நிச்சயமாக எங்களை சந்திக்கச் சம்மதிப்பார் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி., ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின்  தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கே இந்தக் கடிதத்தை அவர் அனுப்பி வைத்திருக்கின்றார்.

அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:-

பிரியமான சகபாடிகளே!

தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கேட்பது பயனுள்ளதாக இருக்குமா என்று யோசிக்கின்றேன்.

அடுத்த ஆண்டு மே மாதம் அவர்களின் தேர்தல். அவர் எங்களைச் சந்திக்க சம்மதிப்பார் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். நாம் டில்லி செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் தென்மாநிலங்களுக்குச் செல்லும்போது அவரைச் சந்திக்கலாம்.

கஜேந்திரகுமார் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரானவர் என்ற போதிலும், அரசமைப்பில் உள்ள விதிகளை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவர் இந்த நேரத்தில் உணர்ந்துகொள்வார் என்று நான் நம்புகின்றேன்.

13ஆவது திருத்தம் தொடர்பாக இலங்கை அரசுக்கு இந்தியாவால் மட்டுமே அழுத்தம் கொடுக்க முடியும். தற்சமயம் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் எமக்கு இல்லாவிட்டால் அரச திணைக்களங்களை எதிர்க்க முடியாது. படைகளும் பௌத்த பிக்குகளும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டால், அனைவரும் கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஒரு கடித நகலை நான் தயாரிக்கலாமா என்பதைத் தெரிவிக்கவும்.

கஜேந்திரகுமார் 13ஆவது திருத்தத்தின் பலனை அவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், எங்களது கூட்டு நடவடிக்கைக்குத் தனது ஒப்புதலைக் காட்டுவதற்காகவே எங்களுடன் வர முடியும்.

நாம் யாரும் மோடியைத் தனித்தனியாகச் சந்திப்பதில் பயனில்லை.

நீங்கள் ஒப்புதல் அளித்தால் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்தலாம்.

மூன்று நாள்களுக்குள் பதிலளிக்கவும். நன்றி! – என்றுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்