இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா, நாளை சனிக்கிழமை (06) மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மன்னர் ஆட்சியை நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டனில் உள்ள Trafalgar Square இல் சுமார் 1,600 மக்கள் அணி திரள திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, இந்த எதிர்ப்பு மன்னருக்கு எதிரானது அல்ல, மன்னர் ஆட்சிக்கு எதிரானது என மன்னர் ஆட்சிக்கு எதிரான அமைப்பான Republic என்னும் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியான Graham Smith தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளவர்கள், மன்னர் ஆட்சி என்பது மக்கள் பணத்தை வீணாக்கும் நடவடிக்கை என்னும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு சுமார் 250 மில்லியன் பவுண்டுகள் செலவாகலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, சமீபத்தில் இங்கிலாந்து மக்கள் 4,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 51 சதவீதமானோர் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு மக்களுடைய வரிப் பணம் செலவிடப்படக்கூடாது எனத் தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவே, முடிசூட்டுவிழா அன்று, “மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்”, “இவர் எங்களுடைய மன்னர் அல்ல” என்று கூறும் பதாகைகளுடனும், கோசங்களுடனும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.