காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்து கொலை

தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்து கொல்லப்பட்டு, அரை நிர்வாணமாக சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. பெங்களூரில் காய்கறி மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வந்த விஜிக்கும், அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

ஆனால், இவர்களின் காதலுக்கு ராஜேஸ்வரி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டு, அடுத்த நாள் மாலையும், கழுத்துமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இது குறித்து அங்கிருந்த கிராமத்தில் இருந்த பெரியோர் ஒன்று கூடி பேசிய போது, 3 மாதத்தில் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக பெண்ணின் வீட்டார் வாக்குறுதி கொடுத்து மகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

3 மாதங்கள் கடந்த நிலையில், ஊரடங்கை காரணம் காட்டி, பெண்ணின் பெற்றோர் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.

இதற்கிடையில், இந்த ஊரடங்கு காரணமாக, பெங்களூரில் பார்த்து வந்த காய்கறி வியாபாரம் மற்றும் சிப்ஸ் கடையை விஜியால் நடத்த இயலாத நிலை ஏற்பட்டு வருமானத்திற்கு வழியில்லாமல் தவித்து வந்துள்ளார்.

இருப்பினும், தனது காதல் மனைவியை தன்னுடன் அனுப்பும் படி, ராஜேஸ்வரியின் தந்தையிடம் விஜி கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

அதன் பின், தன்னுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என்று கூறி 31-ஆம் திகதி ராஜேஸ்வரியின் தந்தை விஜியை அழைத்துள்ளார்.

இந்த் நிலையில் தான், மறுநாள் காலை பாலக்காடு அருகே விஜி மர்ம உறுப்பு நசுக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணமாக இறந்து கிடந்தார்.

அவரை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். விஜியின் சடலம் சாலையில் கிடப்பது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஜி காதல் விவகாரம் தொடர்பாக அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறும் ஏதும் காரணமா? என்ற கோணத்திலும், விஜியின் தந்தையிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்