தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் | முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்றும், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.தமிழகத்தில் நாளை முதல் பஸ்கள் ஓடும் - எடப்பாடி பழனிசாமி புதிய தளர்வுகளை அறிவித்தார்

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் 7-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் 4-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது. அப்போது, மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், செப்டம்பர் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் ஆலோசனை நடத்தினார். அன்று மாலையே தமிழக அரசு சார்பில் ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், புதிய தளர்வுகளை அறிவித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அ.தி.மு.க. அரசு, இந்த நோய்த் தொற்றில் இருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. அரசு எடுத்துவரும் சிறப்பான நடவடிக்கைகளால், அரசின் நலத்திட்டங்கள் மக்களை பெருமளவில் சென்று சேர்ந்துள்ளதால், பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு, வேலைவாய்ப்பின்மையும் இரண்டே மாதங்களில், ஆறில் ஒரு பங்காக குறைந்துள்ளது எனவும், தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது எனவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வு கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்பு குழுக்களின் கருத்துகளின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட கலெக்டர்களின் காணொலி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் 31-8-2020 (இன்று) முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

எனினும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வு கூட்டங்களின் அடிப்படையிலும், 29-8-2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31-8-2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30-9-2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1-9-2020 (நாளை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரெயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டுக்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி, செல்போன் எண்ணுடன் இ-பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் ஆட்டோ ஜெனரேட்டர்டு முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும்.

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் அரசால் வெளியிடப்படும். இதன்மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

* மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்து சேவை 1-9-2020 (நாளை) முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* பெருநகர சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து 7-9-2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும்.

* சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். (தற்போது இரவு 7 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி)

* அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தவிர்க்க இயலாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

* திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 21-9-2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

* தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள், 1-9-2020 (நாளை) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். எனினும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும், தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய்த் தொற்று உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

* நீலகிரி மாவட்டத்துக்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர்.

* திரைப்பட தொழிலுக் கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக் கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

* ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு, செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.

* மாநிலங்களுக்கு இடையே யான ரெயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்துக்குள் பயணியர் ரெயில்கள் செயல்பட 15-9-2020 வரை அனுமதியில்லை. 15-9-2020-க்கு பிறகு, தமிழ்நாட்டுக்குள் பயணியர் ரெயில்களை அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

* விமான போக்குவரத்து மூலம் பயணிக்கும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள், ரெயில் போக்குவரத்து மூலம் பயணிக்கும் பிற மாநில பயணிகள், தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தொற்றை கண்டறிதலுக்கான புதிய நடைமுறை வெளியிடப்படும்.

* தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

* மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங் களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

* தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

அ.தி.மு.க. அரசு அமல்படுத்தி வரும் கட்டுப்பாடுகள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர பரிசோதனைகள் மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உள்ள நிலையில் மக்களை காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதனால் நோய்ப்பரவல் மேலும் பரவுவதை கட்டுப்படுத்த இயலும்.

எனவே, பொதுமக்கள் அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறேன். நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஆசிரியர்