சபரிமலை ஐயப்பன் ஆலய நடை நாளை திறப்பு

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை, புரட்டாசி மாத பூஜைக்காக நாளை (புதன்கிழமை) திறக்கப்படுகிறது.

இணையத்தளம் ஊடாக  வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களும் நடை திறக்கப்பட்டு, பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி புரட்டாசி மாத பூஜைக்காக நாளை (புதன்கிழமை) ஆலய நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து ஆலய ஊழியர்கள், பொலிஸார் ஆகியோருக்கு பிரசாதம் வழங்கப்படும். அன்றைய தினம் ஏனைய  சிறப்பு பூஜைகள்  நடைபெறாது. இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

எதிர்வரும் 17ஆம் திகதி (வியாழக்கிழமை) முதல் 21ஆம் திகதி வரை 5 நாட்கள் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும்,மாலையில் 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி பூஜைகள் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளையொட்டி சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், படி பூஜை, உதயா ஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறாது.

5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு 21ஆம் திகதி, இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்