சுமையும் சுகமும் | சிறுகதை | விமல் பரம்

அதிகாலை குளிரின் தாக்கத்தில் உறக்கம் கலைந்து கண் விழித்தேன். அருகில் படுத்திருந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.

“என்னடா இங்க வந்து படுத்திருக்கிறாய்” கேட்டதும் நினைவுக்கு வந்தது.

“ஹாப்பி பேர்த்தே செல்லம். இருபத்தேழு வயசாச்சுடா உனக்கு”அவளின் தலை தடவி முத்தமிட்டேன்.

“தாங்யூ அம்மா”

“கோயிலுக்குப் போவம். மது எழும்பிட்டாளா.. அவளுக்கு விஷ் பண்ணிட்டியா ”

“அவளைப்பற்றித் தெரியும்தானே. அறையை விட்டு வெளிய வரேல நானும் எழுப்பேல. இண்டைக்கு அவளுடைய நாளம்மா. சந்தோஷமாய் தனக்குப் பிடிச்சதைச் செய்யட்டும் விடுங்கோ”

“செய்ய வேண்டாம் எண்டு சொல்லேலயே. செய்யிறதை உன்னோட சேர்ந்து செய் எண்டுதானே சொல்லுறன்”

“வேண்டாம் அம்மா. அவளுக்கு ப்ரண்ஸோட கொண்டாட பிடிச்சிருக்கு. கொண்டாடட்டும் எனக்கு உங்களோட ஈலிங் அம்மன் கோயிலுக்கு வர பிடிச்சிருக்கு. நமக்குப் பிடிச்சதைச் செய்யலாமே. நான் போய் உங்களுக்கும் ரீ போடுறன். ஆறுதலாய் வாங்கோ” இறங்கிப் போனவளைப் பார்த்தேன்.

லண்டனில் பிறந்து வளர்ந்தாலும் அவளின் இயல்புகள் ஊரோடு ஒத்திருந்தது. மென்மையான குணமும் மற்றவர்களின் மனம் நோகாமல் விட்டுக் கொடுத்து அரவணைத்துப் போகும் பண்பும் இவளோடு கூடப் பிறந்தவை. இவளை நினைத்து பெருமைப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மதுராவை நினைத்துக் கவலைப்படுவேன். இவளுக்கு நேர் எதிர். நினைத்ததைச் சாதிக்கும் பிடிவாதம். தன்னைப் பற்றியே சிந்திக்கும் சுயநலம். அவளுக்கும் இன்று பிறந்தநாள். ஒரே திகதி ஒரே மாதம் இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்டுப் பிறந்த இளையவள். சின்ன வயதில் சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாளை மதுராவின் பிடிவாதத்தால் இப்பொழுது தனித்தனியாக கொண்டாடுகிறார்கள். ஒரு வயிற்றில் பிறந்தும் இருவேறு குணங்களோடிருக்கும் இவர்களுக்கு ஏற்றமாதிரி ஒரு வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொடுக்கப் போகிறேன். நினைக்கும்போதே தனிமை என்னைப் பயமுறுத்தியது.

என் பார்வை சுவரில் தொங்கிய மரச்சட்டத்துக்குள் மாலையோடிருந்த ஆனந்தனின் மேல் பதிந்தது. திருமணமாகி லண்டனுக்கு வந்து வாழ்க்கையைத் தொடங்கியதும் வசதி குறைவாய் இருந்தாலும் நிறைவாய் வாழ்ந்ததும் நினைவுக்கு வந்தது.

“வேலைக்குப் போக விருப்பம் எண்டால் போய்வா. போனால் நல்லது. நாலு விஷயங்களை அறியலாம். உனக்கும் பொழுது போகும்” லண்டன் வந்த தொடக்கத்தில் சொன்னார்.

வேலைக்குப் போக பயமாயிருந்தது. புது இடம் புரியாத பாஷை. சிலமாதங்களுக்குப் பிறகு ஆனந்தனுக்குத் தெரிந்த கம்பனி ஒன்றில் வேலை செய்தேன். ஆதிரா மதுரா பிறந்தபின் வேலைக்குப் போக முடியவில்லை. ஆனந்தனின் கடும் முயற்சியினால் வசதிகள் வந்தது.

“மதுரா பிறந்த அதிஷ்டம் வாடகை வீட்டிலயிருந்து சொந்த வீட்டுக்கு வந்திட்டம்” என்றார்.

“கஷ்டப்பட்டு உழைக்கிறது நீங்கள். அவள் வந்த அதிஷ்டம் எண்டு சொல்லுறீங்கள்”

“உழைக்கிறது கையில சேர அதிஷ்டமும் வேணும்” மதுராவைப் பார்த்தபடி சொன்னார்.

சின்ன வயதில் இருந்தே அமைதியாக என் பின்னே சுற்றிக் கொண்டிருப்பாள் ஆதிரா. அழகிலும் புத்திசாலித்தனத்திலும் எல்லோரையும் கவருவாள் மதுரா.அப்பா செல்லம். அதிஷ்டக் குழந்தை என்றதும் செல்லம் அதிகமாகி விட்டது. தனக்கு வேண்டியதை அழுது சாதித்துக் கொள்வாள். அக்காவை விட எதிலும் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணமும் அவள் கூடவே வளர்ந்தது. போட்டி போட்டு ஜெயிக்கும் அவளின் குழந்தைத்தனத்தை முதல் ரசித்தாலும் வளர வளர அவளின் செய்கைகள் அதிகமாகி விட்டதைக் காண கவலையாக இருந்தது. ஆனந்தனும் திடீரென்று போனதும் அவளைச் சமாளிக்க முடியவில்லை. பிடிவாதம் அதிகமானது. கேட்டது கிடைக்காவிட்டால் வார்த்தையால் நோகவைப்பாள்.

“இருவது வருச வாழ்க்கை போதுமெண்டு நீங்கள் போயிட்டீங்கள். வயசுப் பிள்ளைகளோட நான் என்ன செய்வன் எண்டு நினைச்சுப் பார்த்தீங்களா”

மனம் தவிக்கும்போது ஆனந்தனிடம் கேட்கும் கேள்விக்கு வழமைபோல் பதில் இல்லை.

கட்டிலை விட்டு எழுந்து யன்னல் திரையை விலக்கினேன். இரவு முழுவதும் கொட்டிய பனியில் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப் பூக்கள் பூத்தது போலிருந்தது. லண்டனுக்கு வந்து முற்பது வருடங்களானாலும் இந்த குளிரைத் தாங்கமுடியாமல் அவதிப்படுகிறேன். தடித்த ஜம்பரை போட்டுக் கொண்டு வெளியே வந்தேன். அம்மா என்று அழைத்தபடி கட்டி அணைத்த மதுராவை வாழ்த்தியபடி நிமிர்ந்தேன். அவளின் உடையும் அலங்காரமும் அசத்தலாயிருந்தது. ஆதிராவைப் பார்த்தேன். சாதாரணமான உடையில் இருந்தாள். சந்தோஷம் காணாமல் போய்விட்டது.

“ஒரே மாதிரி உடுப்பு எடுக்கா விட்டாலும் அவளுக்கும் சேர்த்து எடுத்திருக்கலாமே”

“படிக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டன். பிடிவாதமாய் நிண்டு படிச்சதால நல்ல வேலை கிடைச்சு கை நிறைய உழைக்கிறன். ஆசைப் பட்டதை வாங்கிறன். அவளும் படிச்சிருக்கலாமே. படிப்பை விட்டிட்டு கிடைச்ச வேலையளைச் செய்து கஷ்டப் பட்டால் நான் என்ன செய்யிறது”

“படிச்சுக் கொண்டிருந்தவள் இடையில விட்டது உன்னாலதானே. அப்பா போன கஷ்டத்திலும் படிக்க வேணும் எண்டு அடம் பிடிச்சாய். அவள் மேலதிகமாய் உழைக்கிறதுக்குப் படிப்பை விட்டாள்”

“அப்பா இருக்குமட்டும் குறையில்லாமல் எங்களைப் பார்த்தார். பிறகு நீங்கள்தானே பாக்கவேணும் இந்த நாட்டில உழைக்கிற வசதியிருந்தும் வேலைக்குப் போகேல. பிள்ளையளைப் பெத்தால் மட்டும் போதுமே குறையில்லாமல் வளர்க்கிறதும் உங்கட கடமைதானே”

ஆனந்தன் போன அதிர்ச்சியில் இருந்து மீண்டு எழ தாமதமானாலும் வேலைக்குப் போனேன். உடல் ஒத்துழையாமல் அடிக்கடி நோயில் படுத்ததால் வேலையைத் தொடர முடியவில்லை. ஆதிராவும் விடவில்லை. தெரிந்தும் மதுரா அப்பிடிக் கேட்டது வலித்தது.

அந்த நேரங்களில் வீட்டுக்குக்கட்டும் பணம் வீட்டுச்செலவு படிப்புச்செலவு என்று நாலாபக்கமும் வரும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் இடிந்து போயிருந்தேன். நிலைமை தெரிந்தும் மேலதிகமாகப் படிக்கவேணும் என்று அடம்பிடித்த மதுராவைச் சமாளிக்க முடியவில்லை. தன் படிப்பை நிறுத்தி வேலைக்குப் போய் படிக்க வைத்தாள் ஆதிரா. அந்த நன்றி இல்லாமல் வார்த்தைகளால் நோக வைப்பவளை என்ன செய்வது.

“ஏனம்மா ஓரே நாளில எங்களைப் பெத்தீங்கள். என்ர ஆசைப்படி பேர்த்தேயைக் கொண்டாட ஒவ்வொரு முறையும் கெஞ்ச வேண்டியிருக்கு. ஆதிக்கும் செய் எண்டு என்னை நிம்மதியாய் கொண்டாட விடுறதில்லை. அவளும் வேலை செய்யிறாள்தானே. அவளின்ர தகுதிக்கு ஏற்றதாய் உடுப்பு வாங்கட்டும் கொண்டாடட்டும். அவளை விட மூண்டு மடங்கு உழைக்கிற என்னை அவளோட ஒப்பிட்டுக் கதைக்கிறீங்கள். எப்ப பாத்தாலும் பேர்த்தேயண்டு ஏதாவது சொல்லி என்ர மூடை குழப்புறீங்கள். எவ்வளவு சந்தோஷமாய் ப்ரண்ஸோட ரெஸ்ரோறண்டுக்குப் போக நினைச்சன்” கோபத்தில் கத்தினாள்.

“உன்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்தவளை நீ பாக்கக் கூடாதா. சின்னவயசில அக்கா எண்டு கூப்பிட்ட நீ இப்ப அவள விட படிச்சிட்டன் எண்டு பெயர் சொல்லிக் கூப்பிடுறாய். அவளில பாசமாவது இருக்குதா உனக்கு. அவளை விட்டிட்டு எப்ப பாத்தாலும் ப்ரண்ஸோட ஊர் சுத்துறாய் ரெஸ்ரோறண்ட் போறாய்” பதிலுக்கு நானும் கத்தினேன்.

“நான் என்ன சின்னப்பிள்ளையே. உழைக்கிற எனக்கு என்ன செய்யவேணும் எப்பிடிக் கூப்பிடவேணும் எண்டு தெரியும்”

“விடுங்கோம்மா. அவள் விருப்பப்படி செய்யட்டும். நீ போயிட்டுவா மது”

அவளை அனுப்பினாள் ஆதிரா.

“உழைச்சதெல்லம் நீ வீட்டுக்கு செலவழிக்கிறாய். இவளைப் போல நீயும் சுயநலமாய் இரு”

மனம் நோக மதுரா நடந்தாலும் ஆதிரா அவளிடம் பாசமாய் இருந்தாள். பேசியதை மறந்து இருவரும் ஒன்றாக இருந்து கதைக்கும்போது பார்க்க சந்தோஷமாயிருக்கும். இப்படியே இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கும்.

எங்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்யும் ஆதிராவுக்கு திருமணத்தின் மூலமாவது ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும். வயதும் ஏறிக்கொண்டு போகிறது. படித்தவர்களாய் நல்ல வேலையில் இருப்பவர்களாய் பார்த்துச் செய்வதற்கு இரண்டு வருடமாய் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வருவதெல்லாம் சரிவராமல் குழம்பிக் கொண்டேயிருந்தது.

“ஆதின்ர தகுதிக்கு ஏற்றதாய் பாருங்கோவன். படிக்காமல் படிச்சவன் வேணுமெண்டால் கலியாணம் குழம்பும்தானே” மதுரா சொன்னதைக் கேட்க கோபம் வந்தது.

“படிக்காமல் எண்டு சொல்லுறியே… என்ன எழுத படிக்கத் தெரியாமல் இருக்கிறாளே. அவளும் படிச்சவள்தான். உன்னைப்போல யூனிவர்சிற்றிக்குத் தான் போகேல”

“இப்பவும் நான் உழைச்சுக் கொண்டு என்ர முன்னேற்றத்திற்குப் படிக்கிறன். என்ர சம்பளமும் உயருது. இரண்டு இடத்தில வேலை செய்யிறாளே தவிர படிக்கிற எண்ணம் அவளுக்கு இல்லை”

“அவள் தனக்காக உழைக்கிறாளே. ஓடி ஓடி உழைக்கிறதெல்லாம் இந்த வீட்டுக்காகத்தானே. உன்னைப் போல தனக்காகச் சேமிக்க அவளுக்குத் தெரியாது” எரிச்சலோடு சொன்னேன்.

“வீட்டுச் செலவுக்கு என்ர பங்கால நானும் தாறன். அவளின்ர கலியாணத்துக்குச் சேர்க்க சொல்லுங்கோ. பிறகு ஆதிக்கு காசு தா எண்டு என்னட்ட வந்து நிற்கவேண்டாம்” கறாராய் சொன்னவளைப் பார்த்து முறைத்தேன்.

“ஏனடி இப்பிடி இருக்கிறாய். அவளுக்குச் செய்யாமல் நீயாருக்குச் செய்யப் போறாய். அவள் செய்ததை மறந்திட்டியா. நான் ஏலாமல் படுக்கையில கிடந்தாலும் நீ பாக்கமாட்டாய். உனக்கு காசுதானே முக்கியம்” தொண்டை அடைத்தது.

“என்னம்மா இது. நீங்கள் ஏன் கவலைப்பட்டு அவளோட கத்துறீங்கள். எனக்கு ஒண்டும் செய்யவேண்டாம் விடுங்கோ”

ஆதிரா சொல்ல பட்டென்று எழுந்து தன் அறைக்குப் போனாள் மதுரா.

ஆதிராவோடு இரவுச் சமையலைத் தொடங்கும்போது உள்ளே வந்தாள்.

“அம்மா சமைக்கவேண்டாம் ரெஸ்ட் எடுங்கோ. சாப்பாட்டுக்கு ஓடர் பண்ணிற்றன். இப்ப வந்திடும்” என்றாள்.

“ரெஸ்ரோறண்டுக்குப் போய் சாப்பிடுவாய். என்ன திடீரெண்டு வீட்டுக்கெல்லாம் ஓடர் பண்ணிறாய்”

“ஒண்டும் செய்யிறேல எண்டு குறை சொல்லுறீங்கள். செய்தால் ஏன் எண்டு கேக்கிறீங்கள். உங்களுக்கு ஏதாவது வேணும் எண்டால் கேளுங்கோ. உழைக்கிறவள் தன்னைப் பாக்கட்டும். நான் உங்களைப் பாப்பன்” என்றாள்.

பதில் சொல்ல வாயெடுத்தபோது சாப்பாடு வந்து விட்டது.

மதுரா வந்து உணவுகளைப் பிரித்து மேசையில் பரப்பி வைத்தாள். சாப்பிட உட்கார்ந்தோம்.

உணவை வாயில் வைத்ததும் வித்தியாசமான ருசியில் நன்றாகயிருந்தது.

“சாப்பாடு நல்லாயிருக்கு மது. இவ்வளவு ருசியாய் நான் சாப்பிட்டதேயில்லை” என்றாள் ஆதிரா சாப்பிட்டுக் கொண்டே.

“ஒவ்வொரு கிழமையும் ப்ரண்ஸோட ரெஸ்ரோறண்டுக்குப் போய் இதுதான் சாப்பிடுவன். நீ சாப்பிட்டிருக்கமாட்டாய். வாங்கிச் சாப்பிட உனக்கு கட்டுப்படியாகாது. கிடைக்கிறநேரம் வடிவாய்ச் சாப்பிடு”

சூடாய் மதுராவுக்கு பதில் சொல்ல நிமிர்ந்தபோது ஆதிரா கண்ணில் பட்டாள்.

தங்கையைப் பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக உணவை ருசித்துச் சாப்பிடுவதைக் கண்டதும் மதுராவிடம் இருந்த கோபம் குறைந்தது.

ஆதிராவிற்கு வந்த குறிப்புகளில் ஒன்று பொருந்தியதால் குறிப்பு வந்த இடத்தில் பெடியனைப் பற்றி விசாரித்தேன்.

“பெயர் சுந்தர். யாழ்ப்பாணத்தில ஏ எல் படிச்சிட்டு பத்தொன்பது வயசில ஏஜென்சி மூலம் லண்டன் வந்தவனாம். விசா எடுத்த பிறகு ஊரில உள்ள சொத்துக்களையும் வித்து தாயையும் மூண்டு தங்கச்சிமாரையும் கூப்பிட்டு படிக்க வைச்சு ஒரு தங்கச்சிக்கு கலியாணம் செய்து வைச்சிட்டான் மற்ற இரண்டு பேரும் வேலை செய்யினம். இப்ப பெடியனுக்கு முப்பத்தினாலு வயது. கடை வைச்சு நடத்துறான்” என்றார்கள்.

கேட்டதும் மனம் சங்கடப்பட்டது. வயது அதிகமோ… படிப்பைக் குழப்பி லண்டன் வந்தபின்பும் தொடர்ந்து படிச்சிருக்கலாம். சின்ன சின்ன வேலைகளைச் செய்துதானே குடும்பத்தைப் பார்த்திருப்பான். பொறுப்பும் இருக்கு. கடையில் பெரிதாக என்ன லாபம் வரப்போகிறது. போற இடத்திலும் இவள் கஷ்டப்படப் போறாளே என்று நினைக்க வேறு இடம் பார்க்கலாம் என்று தோன்றியது.

சொன்னதும் மதுரா குரலெடுத்துக் கத்தினாள்.

“இப்பிடியே ஒவ்வொண்டையும் தட்டிக் கொண்டு வாங்கோ கலியாணமே நடக்காது. இரண்டு பேருக்கும் படிப்பு வேலையெல்லாம் பொருத்தமாயிருக்கு. ஆதியும் ஒரு கடையிலதானே வேலை செய்யிறாள்”

“அவசரப்பட்டு செய்யேலாது. வேற குறிப்பையும் பாப்பம் நீ என்ன சொல்லுறாய் ஆதிரா”

“உங்கட விருப்பமம்மா”

“அம்மான்ர சொல்லுக் கேட்டியோ உனக்கு கலியாணமே நடக்காது. உன்னால எனக்கும் நடக்காது” கத்தினாள் மதுரா.

கவலைகள் மனதை அழுத்த அடிக்கடி உடம்புக்கும் முடியாமல் இருந்தது.

அன்று என் தோழி திலகாவிடமிருந்து போன் வந்தது. அவளிடமும் என் கவலைகளைப் புலம்பியிருக்கிறேன். நல்ல இடம் இருந்தால் பார்க்கச் சொல்லி ஆதிராவின் குறிப்பையும் அனுப்பியிருந்தேன்.

“வாசுகி என்ர மகனுக்கு ஆதிராவின்ர குறிப்பு பொருந்தியிருக்கு. உங்களைப் பற்றி சொல்ல நேரில வந்து கதைச்சுப் பார்த்து பிடிச்சால் ஓகே எண்டான். எனக்கு அவன் ஒருத்தன்தானே. அவன்ர சம்மதம் முக்கியம். இரண்டு பேரும் கதைச்சுப் பழகட்டும். பிறகு முடிவு பண்ணலாம். இந்த சனிக்கிழமை வாறம்” என்றாள்.

எனக்கு படபடப்பில் மூச்சு வாங்கியது. சின்ன வயது தோழி. வசதியானவள். மகனைப் பற்றியும் அவனின் படிப்பு செய்யும் வேலையின் விபரங்களையும் அனுப்பியிருந்தாள்.

“ஆதின்ர படிப்பைக் கேட்டால் வேண்டாம் எண்டு ஓடிவினம்” என்றாள் மதுரா

“அக்கா எண்டு மதிச்சுக் கதை இல்லாட்டி பேசாமலிரு. அவளுக்கு நல்லது நடந்தால் உனக்குப் பிடிக்காதே” சத்தம் போட்டு அவளை அடக்கினேன்.

வீடு அவர்களை வரவேற்க ஆயத்தமானது.

அவர்கள் வந்தபோது மதுரா வெளியே போயிருந்தாள். சிரித்த முகத்தோடு வந்து தன்னை அறிமுகப் படுத்தினான் சுரேன். இயல்பாய் எங்களுடன் கதைத்தவிதம் அவனிடம் நல்ல அபிப்பிராயத்தை வரவழைத்தது. அவனுக்கு ஆதிராவைப் பிடிக்கவேண்டுமே என்று வேண்டிக் கொண்டேன். மதியம் சாப்பிட ஆயத்தமானபோது மதுரா வந்தாள். சுரேனைப் பார்த்ததும் திகைத்து நின்றவளின் கண்களில் ஒரு கணம் பொறாமையோடி மறைந்ததைக் கவனித்தேன். வந்து கை குலுக்கி தன்னை அறிமுகப்படுத்தினாள். அவர்களோடிருந்து கதைத்தாள். எதையும் அலட்சியமாய் நோக்கும் அவளின் முகம் மாறியிருந்தது. அவர்கள் போனதும் ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்குப் போய்விட்டாள்.

“சுரேனைப் பற்றி என்ன நினைக்கிறாய்” ஆதிராவிடம் கேட்டேன்.

“நான் என்னம்மா சொல்லுறது. அவையள்தானே முடிவு சொல்லவேணும்” என்றாள் சிரித்தபடி.

மதுராவை அழைத்தேன்.

“நீ என்ன நினைக்கிறாய் மது. ஒண்டும் சொல்லாமல் அறைக்குள்ள போயிட்டாய்”

“அவையள் என்ன சொல்லினம் எண்டு பாப்பம். வீணாய் ஏன் நம்பிக் கொண்டிருக்கிறீங்கள்”

“நல்ல வார்த்தையாய் சொல்லன்” அவளிடம் ஏன் கேட்டேன் என்றாகிவிட்டது.

ஞாயிற்றுக்கிழமையும் வந்தார்கள். தோட்டத்தில் கதிரைகள் போட்டு எல்லோரும் இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். வேலியோரத்திலுள்ள பூமரங்களில் பலநிற பூக்கள் பூத்திருந்தன. பூக்களின் வாசனையோடு மெல்லிய குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.

“சுரேனும் ஆதிராவும் மனம் விட்டுக் கதைக்கட்டும். நாங்கள் உள்ள போவம்” எழுந்தாள் திலகா.

“வேண்டாம் அம்மா. உங்க ப்ரண்டாய் இருந்தாலும் படிப்பு வேலையெண்டு நான் விலகி இருந்திட்டன். இவங்களைப்பற்றி எனக்கொண்டும் தெரியாது. கதைச்சு ஒருவருக்கொருவர் தெரிஞ்சுக்கலாம்” சுரேன் சொல்ல தலையாட்டிச் சிரித்தபடி மறுபடியும் உட்காந்தாள் திலகா.

சுரேன்தான் நிறைய கதைத்தான். கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தாள் ஆதிரா. மதுரா தன்னுடைய வேலையைப் பற்றிச் சொல்லி அவனிடமும் கேட்டாள். அவன் சொன்னபோது ஆர்வத்துடன் கேட்டு அதைப்பற்றிய விபரங்களை கேட்டுக் கதைக்க கதை வேலையிலிருந்து பொது விஷயங்களுக்குத் தாவி சிறிது நேரம் அவர்கள் இருவர் மட்டுமே கதைத்துக் கொண்டிருந்தார்கள். அனைவரோடும் அவர்களுக்கு ஏற்றவாறு கதைத்து அந்த இடத்தைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தான் சுரேன்.

அவர்கள் போனபின்பு ஆதிராவின் முகம் யோசனையில் இருந்தது.

“என்ன யோசிக்கிறாய். என்னைப்போல அவரும் படிச்சிருக்கிறார் பல விஷயங்களைத் தெரிஞ்சு வைச்சிருக்கிறார். சம்மதிப்பார் எண்டு நினைக்கிறியா. நானெண்டால் சம்மதிக்கவே மாட்டன்” மதுரா சொல்ல

“நீ அவளைக் குழப்பாதை. ஒரு கிழமைக்குள்ள பதில் சொல்லுறதாய் திலகா சொன்னாள்” என்றேன்.

சுரேனின் சம்மதத்துக்காக காத்திருந்தோம். ஆதிரா வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். ஒரு கிழமையாகி விட்டது.

அன்று சுரேனோடு வெளியில் போயிருந்தாள் ஆதிரா.

தாமதமாக வந்த ஆதிராவின் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.

“என்னம்மா”

“நல்ல விஷயம்தானம்மா. சுரேனுக்கு சம்மதம். அம்மாவோட நாளைக்கு வந்து இங்க சம்மதம் கேட்பார்”

சந்தோஷம் தாங்க முடியவில்லை. மதுராவிடம்

“இது சரிவராது எண்டு சொன்னியேடி. அவையளுக்கு ஆதிராவைப் பிடிச்சிருக்கு ”

முகத்தைத் திருப்பிக் கொண்டு போனவளை இழுத்து வந்தாள் ஆதிரா.

“அவையளுக்கு நீதான் சம்மதம் சொல்லவேணும்”

தலையில் குண்டைப் போட்டாள். மதுராவும் திகைத்துப் போனாள்.

“என்னடி சொல்லுறாய்”

“சுரேனைப் பார்க்கிறபோதும் கதைக்கிறபோதும் இவர் மதுராவுக்குத்தான் பொருத்தம் எண்டு நினைப்பன். அதை எப்பிடிச் சொல்லுறது எண்டு யோசிச்சுக் கொண்டிருந்தன்.

நேற்று நீங்கள் முதல் பார்த்தீங்களே சுந்தர் கடை வைச்சிருக்கிறார். நீங்கள் முடிவு ஒண்டும் சொல்லாததால என்னைச் சந்திச்சு கதைச்சார். பொறுப்பு இருந்தாலும் தங்கச்சியாட்கள் நல்ல வேலை செய்யினம். அவையளுக்கு ஒரு சப்போட்டாய் இருந்தால் அவையளே தங்களைப் பார்த்துக் கொள்ளுவினம். சொந்தக்கடை. உழைச்சு முன்னேறலாம் எண்டு தன்ர நிலைமையைச் சொன்னார் எனக்கது பிடிச்சிருந்ததம்மா. இண்டைக்கு சுரேனை சந்திச்சு மதுவைப் பற்றிச் சொன்னேன். அவருக்கும் மதுவைப் பிடிச்சிருக்குது. இனி மதுவுக்கு சுரேனைப் பிடிச்சிருக்குதா எண்டு நீங்கள்தான் கேக்க வேணுமம்மா” என்றபடி சிரித்தாள்.

“சுரேனைப் போல ஒருத்தர்தான் என்ர வாழ்க்கையில வரவேணும் எண்டு நினைச்சது உனக்கு எப்பிடித் தெரியும்” மதுராவின் குரல் தளதளத்தது.

“அப்பா போனபிறகு அவர் ஸ்தானத்திலயிருந்து உன்னைப் பாத்தவளடி நான். உன்ர மனம் எனக்குத் தெரியாதா. என்ர வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போயிடுவன் எண்டு நினைச்சியா… ”

“அக்கா.. உன்னை…” குரலடைக்க சொன்னவளை அணைத்துக்கொண்டாள் ஆதிரா.

மனம் லேசாக என் கண்களும் கலங்கின.

.

நிறைவு..

.

.

.

விமல் பரம்

நன்றி : சிறுகதை மஞ்சரி மாத இதழ்

ஆசிரியர்