நான் என் மகனுக்கு
இருண்ட காலத்தின் பாடல்களை பாடிக்காட்டி விடியலின் மேடையிலே ஆடுவது பற்றி சொல்லிக் கொடுப்பேன்
என் மகன் என்னைப் போல் துரோகிகளிடம் அகப்படாமல்
காத்திருப்பில் மூழ்காமல்
அன்புநதியால் அடித்துச் செல்லாமல்
ஏமாற்றங்களை ஏணியாக்காமல்
புரட்சி செய்ய சொல்லிக் கொடுப்பேன்
புகழ் போதையில் சிக்காமலும்
பழிச் சொற்களால் பயப்படாமலும்
வாழும் தைரிய விதிகளை கவிதையாக்கிக் காட்டுவேன்
தேயும் பிறை முழுமதியாகும்
ஓடும் நதி கடலை அடையும் என்பதை
முணுமுணுத்துக் காட்டுவேன்
சிரிக்கும் போது அழுகையினையும்
அழும் போது சிரிப்பினையும் நேசியென
இடித்துரைப்பேன்
ஏனெனில்
என் மகன் நான் வாழாத
வேறொரு வாழ்வை வாழ வேண்டுமென்பதற்காய்
ஏனெனில்
என் மகன் நான் பார்த்த
மனிதர்களைக் காணக் கூடாதென.
த.செல்வா
12.47