Saturday, April 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | உழவே உலை ஆளும் தொழில் | ஞாரே

கவிதை | உழவே உலை ஆளும் தொழில் | ஞாரே

1 minutes read

நித்தமும் உழவே அவன் நினைப்பு

நீர் சூழ் உலகினில் அதுவே அவன் பிழைப்பு

நெற்றி வியர்வை சிந்திட அவன் உழைப்பு

சுற்றும் உலகை காப்பதே அவனின் முனைப்பு
காளைகளை அன்போடு விரைந்து ஓட்டி

கருக்கல் பொழுதையும் அவன் முந்தி

காடு களணியை கணப்பொழுதில் திருத்தி

கடின உழைப்பால் உயர்வான் உழவன்

 

சோவென கடும் மழை பொழிந்தாலும்

தீயென வெப்பம் அவனைச் சபித்தாலும்

ஓவென அழாதும் ஓடியும் ஒழியாதும்

சாவென சாகாது பிறவுயிர்களுக்காய் உழைப்பான்

 

தல மழை தரை தொடவே ஏரைப் பூட்டி

நில மகளை தொழுதே உரம் ஊட்டி

குல தெய்வத்துக்கோர் படையல் காட்டி

பல கனவோடு வலம் வருவான் உழவன்

 

நீரை தேக்கி நல் சகதியை கலக்கி

ஏரை ஆழ உழுதே மண்வாசம் நுகர்ந்து

ஊரை சேர்த்து உழவை பெருக்கி

காரை நம்பி கைதொழுவான் உழவன்
கரு கொள்ளும் நிலமகளுக்கு பிரவசம் பார்ப்பான்

உரு கொள்ளும் மழலைப் பயிரை முத்தமிடுவான்

எரு இட்டு நீரை பாய்ச்சி மகிழ்வான்

இரு வேளையும் வயலோடு வாழ்வான்

 

பயிர் வளர்ந்து வரம்பைத் தொடும்

உயிர் ஒன்று இங்கே உவகை கொள்ளும்

பனி விலக்கி நெற்பயிர் தலை தடவி

இனி வாழ்வில் வசந்தம் கொள்வான்
பருவமடையும் பயிர் மகளை பார்த்தே

புருவம் உயர்த்தி அகம் மகிழ்ந்து

இருளும் விலகும் வறுமையும் ஒழியுமென்று

அருளும் நில அன்னையை தொழுவான்

 

வரம்பு மீறி உயர்ந்த செங் கதிரை

வரையறை இன்றி காதல் கொள்வான்

முற்றிய நெற்கதிரின் வாசம் நாசி புக

நெற்றி வியர்வையின் பயனை அடைவான்
நிலவொளியில் கதிரெல்லாம் பொன்னாக ஒளிரும்

நிலக்காற்றில் அசைந்தாடி கலகலவென சிரிக்கும்

நிரை நிரையாய் கதைபேசும் கதிர் கண்டு

நிம்மதி மூச்செறிந்து மட்டற்று மகிழ்வான்

 

அறுவடைக்கு நல்ல நாள் கணித்து

உறவுகளை அழைத்து குதுகலமாய் அறுத்து

வீடுமனை பெருக்கி விதவிதமாக அடுக்கி

வீறுநடை போட்டு ஆனந்தம் கொள்வான்

 

அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கென

ஆதி காலம் தொட்டே அவன் பேணிய வழக்கம்

கலி காலம் வந்து அழித்ததை நாம் தடுத்தோமா!

கிலி கொண்டு அனைத்தையும் நாம் அழித்தோமே!
உழவுக்கு தன் உடல் கொடுத்து

உலக உயிர்க்கு எல்லாம் உணவளித்து

உலகை காக்கும் கடவுள் உழவன்

உழவனின் கண்ணில் நீர் வழிய அனுமதிக்கலாமா!

 

உழவன் கலங்கி விசும்பி நின்றால்

உலகு அழிவை அண்மித்தது என அறி

உழவை மறந்து நீ சென்றால்

உந்தன் பரம்பரை கருகிவிடும் தெளி

 

உழவனுக்கு நாம் கை கொடுக்போம்

அவன் கரங்களை ஆரோக்கியமாக வலுப்படுத்துவோம்

உழவும் ஏருமே உலகை ஆளும் தொழில்

உழவனை வணங்குவோம் உழவை பின்பற்றிடுவோம்
ஞாரே

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More