இலங்கையில் கல்வியில் சமத்துவம் பேணப்படுகின்றதா? | இராமச்சந்திரன் நிர்மலன்

 

உலக வரலாறுகளில் கல்வி எப்போதும் சமத்துவமாக இருந்ததில்லை. உயர் சமூக அடுக்கமைவுகளைச் சார்ந்தோருக்கும், மதரீதியாகவும், இனரீதியுமாகவே கல்வி வழங்கப்பட்டு வந்து இருக்கின்றது. குருகுலக்காலத்தில் சாதாரண மக்களுக்கு கல்வி என்பது எப்போதும் விலக்களிக்கப்பட்டது தான். இலங்கையிலே கலாநிதி கன்னங்கராவினால் கொண்டுவரப்பட்ட கல்வி மறுசிரமைப்புக்கள் கல்வியினை சமத்துவமாக அனைவருக்கும் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. சமத்துவம் என்பது அளவுக்கு ஏற்பவோ, தாக்கத்திற்கு ஏற்பவோ, பெறுமானத்திற்கு ஏற்பவோ, பதவிநிலைக்கு ஏற்பவோ பாகுபாடுகாட்டாமல் சமனாக மதித்தலைக் குறிக்கின்றது.

கல்வியிலே சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே கலாநிதி கன்னங்கரா பாலர் முதல் பல்கலைக்கழகம் வரை அனைவருக்கும் இலவசக் கல்வியினை அறிமுகப்படுத்தினார். அதேபோல் ஆரம்பமட்டத்தில் தாய்மொழிக்கல்வி, விடுதிவசதிகளுடன் அமைந்த மத்திய மகா வித்தியாலயங்கள், சமயகல்வியை அறிமுகம் செய்தமை, ஆசிரியர்களுக்கான மாதச் சம்பளங்களை நிலையாக வழங்கியமை, கலைத்திட்டத்தையும் பரீட்சைகளையும் நாட்டுக்குரிய தாக்கியமை, தன்னாட்சியான பல்கலைக்கழகம் போன்ற முற்போக்கான சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தினார். இதனாலேயே  இலங்கையில் இன்றும் எழுத்தறிவு வீதம் உயர்வானதாகக் காணப்படுகிறது. ஆனபோதிலும் இலங்கையில் இலவசக் கல்வியினை அறிமுகப்படுத்தியிருக்காவிடின் நாடு விவசாய உற்பத்திகளிலாவது தன்னிறைவுபெற்று இருக்கும் என்று பொருளியலாளர்கள் கூறுவதும் நோக்கத்தக்கது.

இன்றைய நிலையில் கன்னங்கராவால் அறிமுகப்படுத்தப்பட்ட சில திட்டங்களுக்கு ஒப்பாக மேலும் சில சமத்துவத்தை வலியுறுத்தும் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. கன்னங்கராவால் அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய மகா வித்தியாலயத்திட்டதிற்கு ஒப்பாக கிராமப்புற மாணவர்கள் உயர்தரத்தில் நகர்புற மாணவர்கள் போல் கல்வியைத் தொடர்வதற்காக இசுறு பாடசாலைத்திட்டம், 1000  பாடசாலைத்திட்டம், அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத்திட்டம் போன்ற திட்டங்கள்  ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும் அமுல்படுத்தப்படுகின்றன. அத் திட்டங்களில் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள், கணிதஅறைகள், செயற்பாட்டு அறைகள், ஆசிரியர் விடுதிகள் போன்றவை நகர கிராம வேறுபாடுகளின்றி ஒரே அமைப்பில் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் ஆய்வுகூடங்களுக்கான உபகரணப் பகிர்வில் நகர கிராமப்புற பாடசாலைகளுக்கு இடையில் சமத்துவம் பேணப்படவில்லை என்பது சமத்துவத்தைப் பாதுகாப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கையிலுள்ள  குறைபாடு ஆகும்.

தரம் ஐந்து மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல் ஊடாக வறிய மாணவர்களுக்கு சிறந்த கல்வி வாய்ப்புக்களை வழங்குவதற்கும் சிறந்த இடைநிலைப் பாடசாலைகளை தெரிவு செய்வதற்காகவும் புலமைப்பரிசில் பரீட்சையினை நடாத்துவதன் மூலம் புலமைப்பரிசில் வழங்குவதற்கு அரசு எடுத்த நடவடிக்கை கல்வியைச் சமத்துவப்படுத்த எடுத்த நடவடிக்கை என்பதிலும் பார்க்க கல்வியில் ஒப்புரவை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையாகவே கொள்ளலாம். இருந்தபோதிலும் இன்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களுடைய பெற்றோருக்கு ஒரு கௌரவப் பரீட்சையாகவுள்ளது. அதற்காகப் பெருமளவு நிதியினைப் பெற்றோர் செலவு செய்கின்றனர். வறிய மாணவரின் கல்விக்கு நிதியளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட பரீட்சை இன்று அதன் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அதேவேளை இன்றைய சூழலில் அரச நிறுவனங்களே மாணவர்களுக்கு இணையவழிக் கல்வியினை வழங்குதல் மூலம் பரீட்சைக்கு தயார்படுத்துதல் என்பது கல்வியில் சமத்துவம் பற்றிய சிந்தனைகளுக்கு எதிர்மறையானது.

இலவசப்பாடநூல், இலவசப்புத்தகம் என்பனவும் கல்வியினை சமத்துவமாக வழங்குவதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகளாகும். இருந்தபோதும் இலவசப் பாடநூல்கள் இன்று பல பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதேநேரம் தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் போன்றவை வெளியிடுகின்ற வளநூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், பாடச்செயற்பாட்டுப் புத்தகங்கள் போன்றவைகளில் சிங்கள மொழியில் வெளியிடப்படும் நூல்களின் எண்ணிக்கைக்கும் தமிழ் மொழியில் வெளியிடப்படும் நூல்களின் எண்ணிக்கைக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இவையும் கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் ஆகும். இதேநேரம் தமிழ்மொழி மூலமான பாட நூல்களில் மொழி பெயர்ப்பில் உள்ள தவறுகளும் வரலாற்றுப் பாடத்தில் அனைத்து இன வரலாறுகளும் சேர்க்கப்படவில்லை என்கின்ற விமர்சனமும் நோக்கத்தக்கது.

கற்றல் குறைபாடு, விசேட தேவைகளுடைய பிள்ளைகளுக்கு கற்றலுக்கான போதிய வசதிகள் இன்மை என்பது கல்வியைச் சமத்துவப்படுத்துவதில் உள்ள குறைபாடு ஆகும். அதேபோல் போரின் தாக்கம் காரணமாக வடகிழக்கு மாகாணங்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்றலில் பின்தங்கியுள்ளனர். அரசு இப் பிரதேசங்களுக்கு மேலதீக நிதியினை ஒதுக்கி விசேட செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக கல்வியில் ஒப்புரவுக் கொள்கையினை ஏற்படுத்துவதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த அரசு முயற்சிக்கவில்லை. இதேவேளை சில புலம்பெயர்ந்த அமைப்புக்கள், மற்றும் தனிநபர்கள் அதற்கான வசதிகளை வழங்க முன்வந்தாலும் அவர்களில் சிலர் அதன் மூலம் கல்வி அதிகாரிகளின் சுயாதீனத்தை முடக்குவதற்கு மறைமுகமாக முயற்சிக்கின்றார்கள். அதேவேளை கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துதல் பற்றிச் சிந்திக்காமல் பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துதல் தொடர்பாக மாத்திரம் சிந்திப்பவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களின் நோக்கம் சிந்தனைக்குரியதாகவே காணப்படுகின்றது.

இன்றைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சுரஸ்ச காப்புறுதியானது சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொண்ட திட்டமாகவே கருதப்படுகின்றது. ஆனபோதிலும் இது மருத்துவத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கையாகவே சில கல்வியாளர்களால் நோக்கப்படுகின்றது. மாணவர்களைத் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வழிசமைப்பதன்  ஊடாக மருத்துவத்துறையினைத் தனியார் மயப்படுத்தும் சிந்தனையாகவே இது கருதப்படுகின்றமை நோக்கத்தக்கது. இதேவேளை பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் மதியஉணவு, காலணிகள் என்பவை கல்வியினை ஒப்புரவுக் கொள்கையூடாகச் சமத்துவத்தை ஏற்படுத்த  மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகக் கொள்ளலாம். இவை போன்ற முற்போக்கான திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

அதேவேளை பாடசாலைகளுக்கு இடையிலான ஆசிரியர் பங்கீடு என்பது கல்வியினைச் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் உள்ள சவாலான விடயம் ஆகும். குறித்த ஒரு ஆசிரியர் ஒரு வார வேளையில் குறைந்தது 20 மணித்தியாலம் கற்பித்தலில் ஈடுபடவேண்டும் என கூறப்பட்டுள்ள போதும் கிராம நகரப்புற ஆசிரியர் பரப்பலுக்கு ஏற்ப இது வேறுபடுகின்றது. பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை பாட அடிப்படையில் உள்ளமை சமத்துவத்தை ஏற்படுத்துவதிலுள்ள பிரதான குறைபாடு ஆகும். இதேவேளை பத்திரிகையில் வெளிவருகின்ற மணிவிழா வாழ்த்துக்களை நோக்கும் போது குறித்த ஆசிரியர்கள் 15, 20 வருடங்களாக ஒரே பாடசாலையில் கற்பித்த நல்லாசிரியராகக் காணப்படுகின்றார். ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக தேசியக் கொள்கை உள்ள போதும், அதனை நடைமுறைப்படுத்தாமை கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதிலுள்ள மிகப் பெரிய குறைபாடு ஆகும்.

அதேவேளை மாணவர்கள் ஒவ்வொருவரும் தனியாள் வேறுபாடுகளைக் கொண்டவர்கள் அவர்களின் ஒவ்வொருவரும் வேறுவேறான கற்றல் பாங்குகளைக் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாடசாலைகளில் பெரும்பாலும் ஒரே முறையிலான கற்பித்தல் முறைகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் வேறு வேறு கற்றல் பாங்குளைக் கொண்ட மாணவர்கள் கற்றலில் பின்தங்குகின்றார்கள் இன்றைய கற்பித்தல் முறைகளும் கல்வியில் சமத்துவத்தைப் பாதிக்கின்றது. பன்முகநுண்மதிக் கொள்கையினை வெளியிட்ட காடினரின் கருத்துப்படி அவர் எட்டு வகையான கற்றல் பாங்குகளை அறிமுகம் செய்கின்றார். அதன் அடிப்படையில் ஆசிரியர் தனது கற்பித்தலில் பன்முகநுண்மதிக் கொள்கையினைப் பயன்படுத்துவதன்  மூலம் சமத்துவத்தை  ஓரளவு  பேணலாம்.

இதே சமயம் இன்றைய கல்விமுறையில் ஞாபகப்படுத்தல் ஆற்றல் உள்ளவர்கள் கல்வியின் சாதனையாளர்களாகக் கருதப்படும் நிலை தோன்றியுள்ளது. இவ் நிலை காரணமாக எழுத்து, வாசிப்பு, கணிதம் போன்ற அறிவாற்றல் திறன்களை தனியே மதிப்பிடுவதன் மூலம் ஒருவர் ஆற்றல் உள்ளவரா? என்று கணிக்கும் நிலையே இன்றும் காணப்படுகின்றது. ஏனைய ஆற்றல்கள் உள்ள மாணவர்கள் கற்றலில் பின்தங்கியவர்களாகவே கொள்ளப்படுகின்றனர். இது கல்வியில் சமத்துவத்தைப் பேணுவதிலுள்ள மிகமுக்கியமான குறைபாடு ஆகும். இவ்வாறான மதிப்பீடுகள் பல்வகை ஆற்றல்கள் உள்ள மாணவர்களின் விருத்திக்குத் தடையாகவே உள்ளது. இதேவேளை பொதுப் பரீட்சையின் முக்கியத்துவத்தைக் குறைத்து தொடர் மதிப்பீடுகள், மற்றும் மாணவர் சுயவிபரப்பதிவேடு, கணிப்பீடு போன்றவற்றை வினைத்திறனுடையதாக மாற்றுவதன் ஊடாக ஓரளவு எனும் கல்வியில் சமத்துவத்தைப் பேணலாம் நாடு முழுவதற்குமான பொதுவான கலைத்திட்டம், பொதுவான பரீட்சைகள், பொதுவான மதிப்பீட்டுத்திட்டம் போன்றவற்றில் தகர்ப்புக்களை மேற்கொள்ளாமல் கல்வியில் சமத்துவம் தொடர்பாக சிந்திக்க முடியாது  கல்வியில் சமத்துவம் என்பது தனியே இலவசபாட நூல், இலவசக் கல்வியுடன்  மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால் ஏற்படுத்த முடியாது

அதேசமயம் பொது மீத்திறன் என்ற எண்ணக்கருவை நீக்கி ஒவ்வொரு மாணவரின் உட்பொதிந்துள்ள தனித்துவ மீத்திறனை வளர்ப்பதற்குரிய செயற்பாடுகள் பாடசாலைகளில் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு பரீட்சை முறையிலுள்ள தவறுகளை வைத்துக் கொண்டு மாணவரை விலத்தும் செயன்முறையைத் தவிர்ப்பதுவும் முக்கியமானது.

இதேசமயம் கல்வியில் தனியார் கல்விநிலையங்களின் ஆதிக்கம், நிதிவசதியுடையவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள்,அனுமதி பெறாத தனியார் பல்கலைக்கழகங்கள், அரச பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை, கல்விக் கொள்கைகள் அரசாங்கம் மாறும் போது மாற்றமடைதல் போன்ற பல்வேறு காரணிகள் கல்வி சமத்துவமாக இல்லை என்பதற்கான ஆதாரங்கள் ஆகும்.

எது எவ்வாறு இருப்பினும் இலங்கையில் கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தவதில் சமத்துவம் பேணப்படவில்லை. தனியே சமத்துவம் இலவசப்பாட நூல், இலவசச் சிருடை, இலவசக் கல்வியுடன்  மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால் கல்வி சமத்துவமானது என்று கூறமுடியாது. அடித்தட்டு மக்கள் ஒதுக்கப்பட்ட மக்களின் வசதி வாய்ப்புக்களில் மாற்றம் ஏற்படாதவரையில் அல்லது மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்காத வரையில் சமத்துவம் என்பது சாத்தியம் அற்றது சமத்துவம் அற்ற கல்விக்கட்டமைப்பை வைத்துக் கொண்ட வேறு வேறான தனித் தனி மாணவர்களை ஒப்பிடுதல் தவறானது ஒவ்வொரு மாணவர்களும் வேறு வேறானவர்கள் அவர்களை ஒப்பிடுதல் தவறானது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பின் நவீனசிந்தனையாளர் போலோ பிறைறியின் புகழ் பெற்ற   கூற்றான கல்வி என்றும் நடுநிலையானது அல்ல ஆசிரியர்களும் நடுநிலையானவர் அல்ல என்ற கூற்றை நோக்குதல் சாலப் பொருத்தமானது.

இராமச்சந்திரன் நிர்மலன்

கட்டுரையாளர் இராமச்சந்திரன் நிர்மலன் வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கல்வியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்.    

ஆசிரியர்