எனக்கான எல்லாவற்றையும்
நீங்கள் அழித்துவிடுகிறீர்கள்
என் உரிமை என் சுதந்திரம்
எனது கருத்து என எல்லாவற்றையும்
உங்கள் பெருந்தேசிய வாதம்
என்னை ஏதுமில்லாமல் செய்துவிட
மல்லுக்கட்டிக்கொள்கிறது
திறந்திருக்கும் இரவின்
கொடிய வாசல்களின் ஊடாக
எனக்கானவற்றை எடுத்து செல்கிறீர்கள்
நான் என்ன செய்ய முடியும்
என்னிலிருந்து சிலர் உங்கள் ஏவல்களை
தலைகளால் நடந்து காவிச்செல்கிறார்கள்
உங்கள் நல்லிணக்க வலை
என்னையும் சேர்த்து மூடிக்கொள்கிறது
நான் குரல் தளர்ந்த ஒரு குழந்தையைப்போல
எனக்குள்ளாலே அழுதுகொள்கிறேன்
நீங்கள் கொல்லைகளால் எறிந்தவற்றை
பொறிக்கிக்கொண்ட என்னவர்கள்
எல்லாமும் கிடைத்துவிட்டதாய்
நன்றி விசுவாச பேச்சுகளால்
என் நிலத்தை உழுது திரிகிறார்கள்
புலன்கள் ஒடுங்கிய கனமொன்றில்
என் வார்த்தைகள் செத்துக்கொண்டிருந்தன
எனது விடுதலைக்கனவும் சுதந்திரமோகமும்
தாமாகவே அழிந்துபோக பழகிக்கொண்டன
ஒற்றுமை ஓரமாய் நின்று
என்னைச் சிரித்துக்கொண்டது
என்னில் மிஞ்சியிருந்த வார்த்தைகளை பார்த்து
பிரியங்கன் பாக்கியரெத்தினம்