இரண்டாம் உலகப் போரில் யூதஇன
படுகொலை:
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் யூதஇன அழிப்பினையும், முடிவிலா துயரின் முடிவில் உருவான நாடான, அதீத தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட இஸ்ரேலை பற்றிய சிறுபார்வை. மூவாயிரம் ஆண்டுகால யூதர்களின் தொடர் துயரங்களுக்கு முற்றுப் புள்ளியாக எழுந்ததே இஸ்ரேல் எனும்தேச உருவாக்கமாகும்.)
ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து, யூதஇன அழிப்பை நடைமுறைப்படுத்துவது என்பதை ஒவ்வொரு படியாக, “யூதர்களின் கேள்விக்கு இறுதியான தீர்வு” என்று கூறப்பட்ட அழிப்புக் கொள்கையையின் படி நிகழ்ந்தது. இதன் முன்பே சுமார் மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பல்வேறு நாட்டினத்தவர்களால் யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
இனப் படுகொலை வதை முகாம்கள்:
இரண்டாம் உலகப் போரின் முன்னாக ஜேர்மனியிய அரசு யூதர்களை குடியுரிமைச் சமூகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டங்களை நிறைவேற்றியது. அதில் நியூரம்பெர்க் சட்டம் 1935 குறிப்பிடத்தக்கது. இப்படுகொலைகளுக்காக 1933 இல் தொடங்கி நாஸிகள் வதை முகாம் வலைப்பின்னல்களை அமைக்கத் தொடங்கினர்.
1941 இலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். இது ஐரோப்பாவின் பிற மக்களிடையே நடைபெற்ற அடக்குமுறை மற்றும் படுகொலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது.
நாஸி கட்சியின் உயர் தலைமையின் வழிகாட்டல்கள் உடன், ஜேர்மனி அரசின் அதிகார மையத்தின் ஒவ்வொரு பகுதியும் ஜேர்மனி ஆக்கிரமித்த ஐரோப்பா முழுவதும் பெரும் படுகொலைகளை நடத்துவதில் ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டு வந்தது.
ஹாலோகோஸ்ட் (Holocaust) இனப்படுகொலை:
இப் பெரும் இன அழிப்பு இரண்டாம் உலகப் போரில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் ஹாலோகோஸ்ட் (Holocaust) என்று குறிப்பிடுவர்.
ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் (நாஸி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர் மற்றும் சோவியத் போர் கைதிகள், பொதுவுடமைவாதிகள், சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள், யூஹோவா சாட்சியாளர் என்போரும் அடங்குவர்.
பல அறிஞர்கள் பெருமளவில் இந்த இன அழிப்பில் கொல்லப்பட்டனர். ஜேர்மன் அரசு இதனை “யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு” என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஆஸ்ச்விட்ஸ் வதைமுகாமில் “தேர்வு”
மே- ஜூன் 1944 இல் ஆஸ்ச்விட்ஸ் வதைமுகாமில் யூத மக்களை கொல்ல “தேர்வு” நடைபெற்றது. வலப்பக்கம் உள்ளவர்கள் அடிமை வேலைக்கும், இடப்பக்கத்தில் உள்ளவர்கள் வாயு அறைக்கும் அனுப்பப்படும ஒளிப்படம் சாட்சியாக இன்றும் உள்ளது. ஜேர்மனியின் அரசினால் பல படிகளில் யூத படுகொலைகள் நிறைவேற்றப்பட்டன.
யூதர்களைக் குடிமக்கள் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர்.
கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய ஜெர்மனி, சிறப்புப் படையணிகள் மூலம், யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து புகையிரத தொடர்வண்டிகள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர்.
ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசு:
அக்கால ஜேர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக் கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது என ஓர் வரலாற்று அறிஞர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுகள் நாஸிகளால் அதன் நேச நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளிலும் நிகழ்ந்தது. பெரும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் நோக்குடன் 42,500க்கும் மேற்பட்ட தடுப்பு முகாம் வசதிகள் பயன்படுத்தப்பட்டன. பெரும் இன அழிப்பு செயலில் ஈடுபட்டவர்களாக 200,000க்கும் அதிகமான நபர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.
1939 இல் போர் தொடங்கிய பிறகு ஜேர்மனியிய மற்றும் வெளிநாட்டு யூதர்கள் போர்கால முகாம்களில் கூட்டம் கூட்டமாக அடைக்கப்பட்டனர். 1941 இல் ஜேர்மனி கிழக்கில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு எல்லா யூத எதிர்ப்பு செயல்களும் அதிகமாகியது. சிறப்பு துணை இராணுவப் படையினரான ஈன்சாட்சுகுரூப்பன் ஓராண்டிற்குள் 2 மில்லியன் யூதர்கள் வரை பெரும் துப்பாக்கிச் சூடுகள் மூலம் படுகொலை செய்தனர்.
1942 இன் நடுப்பகுதியில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தொடருந்துகள் மூலம் வதை முகாம்களுக்கு கடத்தப்பட்டனர். பயணத்தின் கொடுமையைத் தாங்கி உயிர் பிழைத்தவர்கள் புகை அரங்குகளில் திட்டமிட்டு கொல்லப்பட்டனர். இக் கொடுமை ஐரோப்பாவில் 1945 ஏப்ரல் – மேயில் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை தொடர்ந்தது.
வார்சா யூத வீரர்கள் கிளர்ச்சி :
ஜெர்மனி அரசால் இனப்படுகொலை தொடர்ந்த போது, யூத இளைஞர்கள் தங்களின் கிளர்ச்சி ஆயுதப் படைக் குழுக்களை சிறிய அளவில் உருவாக்கினர்.
மிகக் குறிப்பிடத்தக்க வகையில் 1943 இன் வார்சா கிளர்ச்சி நிகழ்வு எழுந்தது. அதில் ஆயிரக்கணக்கான ஆயுதங்களை கொண்ட யூத வீரர்கள் வாபன் சுத்ஸ்டாபலை கரையில் நான்கு வாரங்களுக்கு ஜேர்மனிய படைகளை தடுத்து போரிட்டனர்.
20000 – 30000 யூத போராளிகள், கிழக்கு ஐரோப்பாவில் நாஸி படைகளையும் அவர்களது கூட்டாளிகளையும் எதிர்த்து போரிட்டனர். அதே போல பிரஞ்சு யூதர்கள், பிரஞ்சுல் நாஸி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்து நாஸி படைகள் மற்றும் விட்சி பிரஞ்சு அதிகாரத்திற்கெதிராக கொரில்லா போர் முறையில் போரிட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதம் தாங்கிய யூத கிளர்ச்சிகள் நடந்தன.
நீண்ட காலமாக யூதர்கள் சந்தித்த ஏமாற்றங்களும் துயரங்களும் எப்படியெல்லாம் அவர்களை உறுதியானவர்களாகவும், மிகுந்த தேசப் பற்றுள்ளனவர்களாகவும் இன்று உலக அரங்கில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்பதை இஸ்ரேல் தேச உருவாக்கத்தின் மூலம் காணலாம்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் சர்வதேச வர்த்தகத்தில் எழுபது விகிதம் யூதர்களின் கைவசம் உள்ளது. அதற்கு ஒப்பாக அழகுசாதன பொருட்கள் நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, ஆயுதங்கள் உற்பத்தி என அனைத்திலும் யூதர்களின் பங்கு அதிகம் உள்ளது.
இஸ்ரேல் தேச உருவாக்கம் :
இரண்டாயிரம் ஆண்டுகளாக நாடின்றி தவித்த யூதர்களுக்கு, 1948 ஆம் ஆண்டு ஐ.நா.வின் அங்கீகாரத்துடன் அரபு முஸ்லிம்களின் எதிர்ப்பையும் மீறி பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் எனும் நாடு உருவானது. அவர்களின் தீராக் கனவானது, தேசப்பற்றை வெளிக் கொணர்ந்தவர்களாக இன்று உலக அரங்கில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்பதை இஸ்ரேல் தேச உருவாக்கத்தின் மூலம் காணலாம்
இஸ்ரேல் தேசம் உருவானபோது அங்கு யாரும் ஹிப்ரு மொழி பேசவில்லை. எனினும் தாய் மொழியின் அவசியம் கருதி அந்த மொழியினை மீட்டெடுக்க வேண்டிய தேவையிருந்ததனால் அனைத்து யூதர்களுக்கும் ஹிப்ரு மொழி கட்டாயமாக பயிற்றுவிக்கப்பட்டது.
உலகில் அதி கூர்மையான அறிஞர்களை படைத்த இனமாக யூத மக்கள் விளங்குகின்றனர். உலக நாடுகளில் இதுவரையில் 902 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதில் 203 பேர் யூதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் 56 அறிஞர்களும் உள்ளனர். அத்துடன் இயந்திரவியலில் நோபல் பெற்றவர்கள் 55 யூத அறிஞர்களும், வேதியியலில் 36 , பொருளாதாரத்தில் 32 , இலக்கியத்தில் 15 , மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு 9 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து தாக்கியழிக்கும் தொழில்நுட்ப திறனை இஸ்ரேல் உருவாக்கி உள்ளது. இராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள், நுணுக்கமான இயந்திர தயாரிப்புகள் போன்றவற்றில் பல வளர்ந்த உலகநாடுகளுக்கு கடுமையான போட்டியாக இஸ்ரேல் நாடு உள்ளது. உலகில் வல்லமை கொண்ட விமானப்படை உள்ள நாடுகளின் வரிசையில் அமேரிக்கா ரஸ்யா சீன ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது இஸ்ரேல் என்பதும் யூதர்களுக்கு பெருமையே.
இன்றைய காலகட்டத்தில் அமேரிக்கா ஐரோப்பா கண்டங்களில் அதிஉயர் பதவிகளில் பாரிய எண்ணிக்கையில் இருப்பவர்கள் யூதர்கள் எனலாம். விஞ்ஞானம் சினிமா என எந்த துறையினை எடுத்துக்கொண்டாலும் யூதர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். பல நாடுகளின் பொருளாதர வளர்ச்சிக்கு யூத நிறுவனங்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. யூத மக்களினதும், இஸ்ரேல் தேசத்தின் முக்கிய மூலதனம் அவர்களது திறன்சார் அறிவும் கடும் உழைப்பும்தான்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா