கற்க வேண்டியவற்றை கற்க வேண்டும் கற்ற பின்னர் கற்று உணர்ந்தவாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை கல்வியால் மட்டுமே பாரதத்தை பாராள வைக்க முடியும் என சொன்னவர் ஐயா மேதகு அப்துல் கலாம் அவர்கள். கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகின்றது. நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் என்பவர்கள் முக்கியமானவர்கள். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டிலுள்ள மக்களின் கல்வி அறிவினை வைத்து கணக்கிடப்படுகிறது. அழிவே இல்லாத செல்வம் கல்வி செல்வமே அதேபோல கல்வியின் சிறப்புகளை பாடாத புலவர்களே இல்லை அந்த அளவிற்கு கல்வியின் முக்கியத்துவம் சமூக வளர்ச்சியின் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது. ஆனால் தற்போது இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது இந்த ஆண்டு சுமார் 8 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி உள்ளதாகவும் அவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களுக்கான உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் உயர் கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது, பல முன்னேறிய நாடுகளை விடவும் நாம் உயர் கல்வியில் முன்னேறி உள்ளோம். இதனை பயன்படுத்தி கொள்ளும் ஒரு சில கல்வி நிறுவனங்கள் கல்வியினை சேவையாக பாராமல் அதனை வியாபாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
கல்விக்கு விளம்பரங்கள்
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பார்த்த இடமெல்லாம் கல்வி தொடர்பான விளம்பரங்கள் அதிகம் காணப்படுகின்றது ஏனென்றால் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ன படிக்கலாம் என்பது போன்ற யோசனைகளில் இருப்பர். பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற எதைப் பார்த்தாலும் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களே அதிக அளவில் இடம் பெறுகின்றன. மேலும் உயர் கல்விக்கு ஆலோசனை அளிக்கிறோம் என்ற பெயரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்கள் கல்வியாளர் களை வைத்து நடைபெறுகின்றன. உயர் கல்வி குறித்த தங்களின் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள் நாங்கள் பதில் அளிக்கிறோம் என்பது போன்ற இவ்வாறான நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுகின்றதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். ஆம் எங்களிடம் வாருங்கள் குறைவான கட்டணம், ஹாஸ்டல் வசதி உள்ளது படித்து முடித்த உடன் வேலை, லட்சங்களில் சம்பளம், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மிக குறைந்த இடங்களே உள்ளன. உடனே முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் கல்வி கடன் வசதியினை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். உங்கள் பிள்ளைகளின் எதிர் காலம் எங்கள் கையில் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கல்வி நிறுவனங்களால் செய்யப்படுகின்றன.
இது எந்த அளவிற்கு உண்மை. அவர்கள் சொல்வது போல் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது சாத்தியமா, அதற்காக லட்சக்கணக்கில் கல்வி கட்டணமாக வாங்குகின்றனர், சரி நான் பட்ட கஷ்டம் என் பிள்ளை படக்கூடாது.என் பிள்ளைகள் படித்து முடித்து நம் கஷ்டங்களை தீர்க்கும் என பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர், அந்த அளவிற்கு இவ் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி விட மாட்டோமா என்ற மனநிலையில் உள்ள நடுத்தர வர்கத்தினரை இது போன்ற கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. இதனை நம்பி பெற்றோர்களின் கட்டாயத்திலும் சமூகத்தின் கட்டாயத்திலும் தங்களுக்கு விருப்பப்படாதவற்றை படிக்கும் சூழல் மாணவர்களிடம் உருவாக்கி வருகிறது. இது கல்வி வியாபாரம் ஆகிவிட்டது என்பதையே குறிக்கின்றது. என்ன படிக்கின்றோம் எதற்காக படிக்கின்றோம் என்பது கூட புரியாமல் படித்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடனில் கல்வி
கல்வி என்பது சுதந்திரமான மனநிலையில் இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களின் கட்டாயத்தில் இருக்கக் கூடாது இவ்வாறு விருப்பம் இல்லாத படிப்பினை வங்கிகளில் கல்வி கடன்கள் வாங்கி படித்து,படித்த படிப்புக்கு ஏற்றால் போல வேலை கிடைக்காமல் கல்விக்கடனையும் கட்ட முடியாமல் தவிக்கும் பலர் உண்டு. இந்நாட்டில், வேலைவாய்ப்புக்காக பெருநகரங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படுகின்றது இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்துவிட்டு குறைந்த ஊதியத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் சொற்ப ஊதியத்தில் வேலை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அவர்களின் படும் துயரங்களும் சொல்லி மாளாது. கல்வி கடன்களை அடைப்பதற்கு மட்டுமே வாங்கும் சம்பளம் சரியாக இருக்கும் அப்புறம் எப்படி தன்னை நம்பி உள்ள குடும்பத்தை பார்ப்பது, தனக்கென எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்பது பலருக்கு கேள்விக்குறியாக உள்ளது. முன்பெல்லாம் எப்போது தேர்வு முடிவுகள் வரும் அதனை எத்தனை மணிக்கு வெளியிடுவார்கள் என்பது போன்ற தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்றால் போல் தேர்வு முடிவுகளை பார்த்தவுடன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் மதிப்பெண்களின் விவரங்களை சொல்லி இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சியை வெளிபடுத்தி அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதில் ஆர்வம் செலுத்தி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களிடம் ஆலோசனை பெற்றுநமக்கு விருப்ப பட துறையினை கல்லூரிகளில் தேர்ந்தெடுத்து படித்து வந்த காலம் எல்லாம் போய் விட்டது என்பதை போல உள்ளது தற்போதய நிலை.
ஒரு உதாரணத்திற்கு வேதியல் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என வைத்துக் கொள்வோம் இனி வரும் ஆண்டுகளில் இத்துறை அசுர வளர்ச்சி அடையும் என வைத்துக் கொள்வோம் வேதியல் துறை என்பது ஆய்வகத்தில் வேதிப்பொருட்களை ஆராய்ச்சி செய்வது அதனை சார்ந்த வேலைகளே இருக்கும், இதில் விருப்பமில்லாத ஒருவர் இதனை பயில்கிறார் என்றால் எவ்வாறு அவரால் இத்துறையில் சாதிக்க முடியும்? தனிப்பட்ட விருப்பம் மற்றும் ஆர்வமே கற்றலின் திறனை அதிகரித்து அத்துறையில் சாதிக்க முடியுமே, தவிர இதைப் படித்தால் வருங்காலத்தில் எதிர்காலம் நன்றாக இருக்கும் என விருப்பமில்லாத துறையை படித்தால் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும்.
மதிப்பெண் மையக் கல்வி
இவ்வாறான நிலையில் உயர்கல்வியின் தரத்தை அதிகரிக்கவும் அனைவருக்கும் உயர் கல்வி என்பது கிடைக்கவும் அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பலர் வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்புடன் முடித்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகின்றது அப்பேர்பட்ட மாணவர்களின் மீது அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் நமது கல்வி முறையில் மாற்றங்கள் தேவை என்கின்றனர் கல்வியளர்கள். அதுவும் தற்போதைய கால சூழலுக்கு ஏற்றால் போல அமைய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ‘வார்த்தைகளே புரியாமல் வந்து விழும் சினிமா பாடல் வரிகளை தட்டாமல் பாடும் மாணவர்களுக்கு தாங்கள் படிக்கும் பாடம் வருடம் முழுவதும் படித்தாலும் மண்டையில் ஏற மறுக்கிறது, 2:30 மணி நேரம் சினிமா கதையினை பற்றி விவரிக்க தெரிந்த மாணவர்களுக்கு பாடக புத்தகங்களில் உள்ள பாடங்களை படிக்க முடியவில்லை. காரணம் ஆர்வமின்மை சினிமா பார்க்கும்போது பாடல்கள் கேட்கும் போது அதில் அதிக விருப்பம் கொள்வதால் உடனே நம் மனதில் தங்கி விடுகின்றது ஆனால் நாம் படிக்கும் படிப்பு நம் மனதில் பதிவதில்லை.
ஏனென்றால் மதிப்பெண்களை வைத்து தான் மாணவர்களின் திறமைகள் கணக்கிடப்படுகின்றன நல்ல மதிப்பெண் பெறுபவர்கள் புத்திசாலிகள் மற்றவர்கள் புத்திசாலிகள் அல்ல என நினைக்கும் நிலையினை தற்போதைய கல்வி முறை ஏற்படுத்தி விட்டது.”நமது வீட்டிலும் அவன பாரு உன்கூட தான படிக்கிறான் அவன் எவ்ளோ மார்க் எடுத்து இருக்கான் நீயும் இருக்கியே உனக்கே அசிங்கமாக இல்லையா, எங்களுக்கு அசிங்கமாக இருக்கு” என பெற்றோர்களே பிள்ளைகளை குறை சொல்லும் நிலையில் உள்ளது தற்கால கல்வி முறை. மாணவர்களின் கற்பனை திறனை பொருட்படுத்தாமல் புத்தகக் புழுக்களாக மட்டுமே மாற்றி வைத்துள்ளது. குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஏளனமாய் பார்க்கும் மனநிலை தற்போது உள்ளது. இதனால் அந்த மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பள்ளிகளில் இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவது இல்லை. மேலும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தகுதி தேர்வு (நீட்) என்பதனை மத்திய அரசு அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கை இதன் மூலமே நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றது, தமிழகத்தின் இந்நுழைவுத் தேர்வு குறித்து பல்வேறு மாற்று கருத்துக்கள் இருந்தாலும் மாணவர்களின் ஆர்வம் என்பது அதிகரித்துள்ளதாகவே இந்திய மருத்துவ கவுன்சில் 2022 ஆம் ஆண்டைய புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது.
தயங்கும் மாணவர்கள்
இதனால் மறைமுக கட்டணங்கள் ஏதும் இன்றி அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் மருத்துவம் பயில முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள், இந்நிலையில் தகுதி தேர்வுக்கு பயிற்சி அளிக்கின்றோம் எனக்கூறி ஒரு சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களிடம் பெரும் தொகையினை கட்டணமாக பெறுகின்றன. இதனால் பொருளாதாரத்தில் உயர் நிலையில் உள்ள மாணவர்கள் இவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே மாறிவிடுகிறது. இந் நிலையை மாற்ற வேண்டும் இது போன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பயிற்சி நிறுவங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிகளில் இதற்கான பயிற்சி வகுப்புகள் துவங்க பட வேண்டும் மேலும் இத்தேர்வு குறித்து புரிதல் இல்லாததால் மாணவர்கள் தற்கொலை இத் தேர்வு குறித்த பயம் போன்ற காரணங்களால் மாணவர்கள் இத்தேர்வினை எதிர்கொள்ள தயங்குகின்றனர்.
இது குறித்து முறையான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வேண்டும், என்கின்றனர் மாணவர்கள். ஆம் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ற போல் மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வந்து அவர்களை ஊக்குவித்தால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் பிரகாசமாய் அமையும் இதனை பெரும்பாலான பள்ளிகள் செய்வது இல்லை எங்களிடம் படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்து விட்டார்கள். அவர்களின் மதிப்பெண் விவரங்கள் என கூறி தனக்கு தானே சுய விளம்பரங்கள் செய்து இந்த ஆண்டில் இதை வைத்து எவ்வாறு மாணவர்கள்களிடம் கட்டணம் வசூலிக்க முடியும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உள்ள கல்வி நிறுவனங்கள் பல உள்ளன.
இந்த நிலை மாற வேண்டும் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி குழுக்களை அரசே ஏற்படுத்த வேண்டும் இந்த குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு உயர் கல்வி ஏற்படும் சந்தேகங்கள் பிரச்சனைகள் போன்றவற்றை தீர்க்க முடியும் நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களின் கையில் தான் உள்ளது. ஆக இன்றைய மாணவர்கள் நாளை இளைஞர்கள் இவர்கள்தான் இந்தியாவின் தூண்கள் எனவே மாணவர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி ஆக பார்க்கப்படுகின்றது. மேலும் தொழில்துறையில் பல்வேறு வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு நம் நாட்டில் தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தொழிற்கல்வி அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிறது. கல்வியில் புதுமைகளை புகுத்த வேண்டும்.
தற்போது உள்ள சூழலில் நமக்கு விருப்பப்பட்ட ஒரு படிப்பினை கல்லூரியில் தேர்ந்தெடுக்கிறோம் என்றால் அதனைப் பற்றிய முழு புரிதல் வேண்டும் கல்வி கட்டணம், வேலை வாய்ப்பு நமது பொருளாதர சூழல் சரியான கல்லூரிகளை தேர்ந்தெடுத்து உள்ளோமா, கல்லூரி அங்கீகாரம் பெற்றதா கல்லூரியில் உள்ள அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் தெரிந்திருப்பது அவசியம் ஆகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன இதில் சேர்வதற்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் செயற்கை அனுமதி வழங்கப்படுகிறது. இதில் அடிப்படை வசதிகள் இல்லை போதுமான ஆய்வக வசதிகள் இல்லை என்பது போன்ற காரணங்களால் இந்த கல்வி ஆண்டு மட்டும் 6 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. உயர்கல்வித்துறை எனவே மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளில் அங்கீகாரம் உள்ளதா என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பணிவாய்ப்பு என்ற கனவு
அதேபோல கல்லூரியில் நடத்தப்படும் வளாக நேர்காணலில் பங்கேற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மாணவர்களுக்கு சமமான வேலை வாய்ப்பினை வழங்குவதில்லை எனவும் ஒரு சில கல்லூரியில் மட்டுமே நேர்காணல் நடத்தி தேர்வு செய்கின்றன எனவும் இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் இதனை தடுப்பதற்கு தொழில் தகுதி தேர்வு நடத்த வேண்டும் இதனால் பன்னாட்டு நிறுவனங்களில் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் பன்னாட்டுநிறுவன வேலை வாய்ப்பு க்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என அரசு அறிவித்துள்ளது.
ஆனாலும் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கல்வித்துறையில் இந்தியா பாரம்பரியம் கொண்ட நாடு படித்த இளைஞர்கள் எண்ணிக்கையும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் மிக அதிகம் அரசு இவர்களுக்கான வேலை வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அனைவருக்கும் வேலை என்பது அரசு மற்றும் தனியார் துறையினரால் தர முடியாத சூழல் தற்சமயம் எழுந்துள்ளது. எனவே தொழில் கல்வியினை ஊக்குவித்து மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட ஆவணம் செய்ய வேண்டும். “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள். எவ்வளவுதான் படித்தாலும் கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொண்டால் சரியான நேரத்தில் அது கை கொடுக்கும் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதை போன்று பல்வேறு வாய்ப்புகள் இங்கு கொட்டி கிடைக்கின்றன. அதனை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய புரிதல் என்பது வேண்டும். நம் எதற்காக படிக்கின்றோம் என்பதனை மாணவர்கள் மனதில் இருக்க வேண்டும். இவ்வாறு உள்ளவர்களால் நமது நாட்டினை வளர்ச்சி பங்கு கொண்டு செல்ல முடியும். சுயமாய் சிந்தித்து தன் திறன்களின் அடிப்படையில் தொழில் முனைவோராக மாறும் நபர்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில் கடன்கள் வழங்கி உதவிட வேண்டும். இவ்வுலகில் நம்முடைய பங்கு என்னவென்று தெரிந்து சமூகத்தில் தனக்கென அடையாளத்தை உருவாக்குவது தான் கல்வி இவ்வாறு படித்தவற்றை படித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் செயல்பட்டால் திறமைக்கேற்ற வேலை திறமைக்கேற்ற ஊதியம் மகிழ்ச்சியான சுப வாழ்வு எல்லாம் கிட்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
-மனோஜ் சித்தார்த்தன்