——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
‘ஊரடங்கு… வீடடங்கு’ என்று தமிழர் தேசம் கெடுபிடிகளை எதிர் கொண்ட காலகட்டம். தமிழ் மக்கள் பட்ட துயரம் உலகே அறியும். ஆயினும் மக்களின் துயர் துடைத்த சமூக சேவையாளர்களை தமிழ் மண் ஒரு போதும் மறவாது.
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பதற்கிணங்க மக்களின் காவலனாக, பிணி் தீர்க்கும் வைத்தியராய் யாழ் போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக நின்று மருத்துவம் பார்த்த உன்னத மனிதரே சபாரட்ணம் சிவகுமாரன் எனும் பெருந்தகை.
அல்லட்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணி செய்த புகழ்பூத்த மருத்துவ நிபுணர் சபாரட்ணம் சிவகுமாரன் 14-05-23 ்அன்று கொழும்பில் காலமானார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் பேரிடர் சூழ்ந்த காலப் பகுதியில் சிறப்பாக கடமையாற்றிய வைத்திய நிபுணர் சிவகுமாரன் அவர்கள் பல தலைசிறந்த வைத்தியர்களை உருவாக்கியவர் என்ற பெருமைக்கும் உரியவர்.
போர்க் கால கொடுமை காரணமாகப் பல மருத்துவர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கும், தென்பகுதிக்கு ஓடிக் கொண்டிருந்த வேளையிலும், தாய் நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சிறந்த வைத்தியர், சிரேஷ்ட ஆலோசகர் வைத்தியர் சபாரட்ணம் சிவகுமாரன் பணியானது செயற்கறிய சேவையாற்றிய பெரியோன் ஆவார்.
அத்துடன் அவரது தலைமைத்துவம், புத்திசாலித்தனம், இராஜதந்திரம், நேர்மை, தொழில்முறை, நேரக் கடமை, இரக்கம் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவ விருப்பம் ஆகியவை அனைத்தும் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவரது மாணவர்களில் பலரை இத்தேசத்தின் சிறந்த மருத்துவர்களாக மாற்றியது என்பதும் உண்மையே.
யாழ் இந்துக் கல்லூரியின் வித்து:
மருத்துவபீட மாணவர்களால் “கடவுள்” என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த Dr. சிவகுமாரன் அவர்கள் பல தலைசிறந்த வைத்தியர்களை உருவாக்கிய ஆசானும் ஆவார். கடமை, ஒழுக்கம், நோயாளி முதன்மையானவர் என பல சீரிய பண்புகளை கற்பித்தவர். அர்ப்பணிப்பு மிக்க சேவையாற்றிய மறைந்த மருத்துவர் யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் N.சபாரட்ணம் அவர்களின் புத்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவத்தில் மட்டுமின்றி் ஆன்மீகத்திலும் உண்மையான பக்தர். சொந்த ஊரான காரைநகர் வரலாற்று சிறப்புமிக்க ஈழத்து சிதம்பரம் கோவில் வருடாந்த திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக பல தடவைகள் சென்றுள்ளார். காரைநகரில் உள்ள இந்த பெரிய கோவிலின் அறங்காவலரின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக இருந்து, தனது நாட்டு மக்களிடையே சிறந்த ஆன்மீகத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் இந்த ஆலயத்தை அபிவிருத்தி செய்ய அவர் பல பணிகளை மிகவும் விரும்பி ஆற்றியுள்ளார்.
கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் சிவகுமாரன் அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
எல்லாம் வல்ல சிவபெருமானின் உண்மையான பக்தனாக வாழ்ந்து,
தனது அதிகபட்ச ஆற்றலை நமது தேசத்திற்கு சேவையாய் செய்து தனது வாழ்க்கையை மண்ணின் மகுடமாக வாழ்ந்தார்.
ஆதரவற்ற நோயாளருக்குத் தனது சொந்தச் செலவில் அத்தியாவசிய பால்மா வாங்கிக் கொடுத்துப் பராமரித்தவர். நோயாளருக்குச் சேவை செய்வதைத் தனது விருப்பமான பணியாகச் செய்த கலாநிதி சபாரட்ணம் சிவகுமாரன் பல மருத்துவர்கள் தமிழ் பிராந்தியத்தை விட்டு வெளியேறிய கடினமான காலங்களில் அவர் வடக்கில் மக்களுக்காக பணியாற்றியுள்ளார். அவரின் மேம்படுத்தப்பட்ட அறிவு, திறன்கள் மற்றும் ஒரு நல்ல இதயம் கொண்ட ஒரு அற்புதமான மருத்துவர், அவர் இலங்கையின் பல இன மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மருத்துவராவார்.
தியாக தீபம் திலீபத்தின் இறுதிக் கணங்களில் மெய்யுருகி, நின்தாழ் வணங்கி விழிமூடிய வீரனின் மூச்சடங்கிய செய்தியை உலகிற்கு சாட்சியப் படுத்தியவரும் மருத்துவர் சிவகுமாரன் ஆவார். தமிழ் தேசமே விழிநீர் பொழிந்து சோகத்தில் மூழ்கிய வேளையில் திலீபனின் பாதம் பணிந்து, சிரம் தாழ்த்தி மருத்துவர் சிவகுமாரன் செய்த அஞ்சலி இன்னமும் எங்கள் மனக்கண்களில் முகிழ்ப்பாய் உள்ளது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா