செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை 43 வருடங்கள் முடிவில்லாத போராட்டம் உதவி இயக்குநர் ஹரியின் கதை | விஜய் மகேந்திரன்

43 வருடங்கள் முடிவில்லாத போராட்டம் உதவி இயக்குநர் ஹரியின் கதை | விஜய் மகேந்திரன்

6 minutes read

 

ஓடிசலான தேகம், சற்று இடுங்கிய கண்கள், பலத்த காற்று அடித்தால் தாங்க முடியாதவர் போல காணப்படும் உதவி இயக்குநர் ஹரியை நீங்கள் பல இடங்களில் பார்த்து இருக்கலாம். அவர் யார்? யாரிடமெல்லாம் உதவி இயக்குநராக வேலை பார்த்தார். முப்பது ஆண்டுகள் தமிழ் சினிமாவில் மௌன சாட்சியாக இருந்து கடந்து வந்திருக்கிறார். இலக்கிய கூட்டங்கள், புத்தக விமர்சனம், உலக சினிமா திரையிடல், தீவிரமான சினிமா கலந்துரையாடல் என்று நீங்கள் எங்கு சென்றாலும் அங்கே ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். சில கூட்டங்களில் சேர்களை எடுத்துப் போட்டு கூட்டம் நடத்துபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். டிஸ்கவரி புக் பேலஸ் இவருக்கு இன்னொரு வீடு. எப்போது வேண்டுமானாலும் வரலாம், அங்கிருக்கும் புத்தகங்களை படிக்கலாம் என்ற உரிமையை கடையின் உரிமையாளர் வேடியப்பன் இவர் கலை மீது வைத்திருக்கும் ஆர்வத்தை பார்த்து கொடுத்திருக்கிறார். யார் இந்த ஹரி? தமிழ் சினிமாவில் இயக்குநராக வரவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு ரயில் ஏறும் இளைஞர்களை போல திருச்சியில் இருந்து 1974ஆம் ஆண்டு சென்னைக்கு ரயில் ஏறியவர் தான் ஹரி. இன்று 58 வயதாகும் இளைஞர். சினிமாவும், சென்னையும் இன்றுவரை இவரை சொந்த ஊருக்கு செல்ல விடாமல் வைத்திருக்கிறது. இவரது அனுபவங்கள் மற்றும் அவரது ஒருநாள் எப்படி கழிகிறது என உடன் இருந்து பார்த்தோம்…

காலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கிறது ஹரியின் நாள். சைக்கிளில் சென்று கே.கே நகர் பகுதிகளில் பேப்பர் போடுகிறார். அதன் பிறகு கார்களை சுத்தப்படுத்த போகிறார். அதன் பின் வீடுகள் பார்த்துக் கொடுக்கும் புரோக்கர் வேலை. கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் பலருக்கு நல்ல வீடுகளை பார்த்துக் கொடுக்கிறார். வீடுகள் கிடைக்காமல் அலையும் பேச்சிலர்களுக்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் அறைகளை பார்த்து தங்க வைத்திருக்கிறார்.எல்லோரிடமும் சகஜமாக பழகுவதால் வீடுகள் பார்க்க இவரிடம் தான் வருகிறார்கள். அவர்களிடம் இவ்வளவுதான் கமிஷன் வேண்டும் என்றாலும் அடம்பிடிக்காமல் கொடுப்பதை அன்புடன் வாங்கிக் கொள்கிறார். மதிய உணவுக்கு பிறகு கே.கே நகர் சிவன் பூங்காவுக்கு சென்று சினிமா நண்பர்களை சந்திக்கிறார். அங்கு கதை விவாதம் செய்கிறார். ஒரு லைன் சொல்லி அதை கதையாக மாற்றித்தர சொல்கிறார்கள். அதை எழுதித் தருகிறார். அதற்கான அன்றைய சன்மானத்தை பெற்றுக்கொண்டு அடுத்து வட்டார கிளை நூலகத்துக்கு புத்தகங்கள் எடுக்க செல்கிறார். அதன் பின் டிஸ்கவரி புத்தக கடைக்கு அருகில் உள்ள தேநீர் கடைக்கு செல்ல,அங்கு இயக்குநர் அருண்மொழி வர அவருடன் எண்பதுகளில் சினிமா இருந்த நிலையை பேச ஆரம்பிக்கிறார். அவருடன் ஒவ்வொரு இடத்திற்கு நாம் கூட செல்லும் போது நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். இத்தனை ஆண்டுகள் காத்திருப்பில் இருந்தாலும் சினிமாவை விடாமல் கெட்டியாக பிடித்து இருக்கிறார். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்…

‘எட்டாவது படிக்கும் போது எங்க அறிவியல் வாத்தியார் கேட்டார். யாரு என்ன ஆகப் போறீங்கன்னு? நான் சொன்னேன். சினிமாவுல பெரிய டைரக்டர் ஆகணும் சார். பசங்க அதைக் கேட்டு சிரிச்சாங்க. நம்ம நினைக்கிற நல்ல கருத்துக்களை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க சினிமா தான் பவர்புல் மீடியம் சார்ன்னு சொல்ல வாத்தியார் புரிஞ்சிகிட்டு பாராட்டினார். நல்ல திரைப்படங்கள் எங்க வந்தாலும் ஓடிப்போய் பார்ப்பேன். நல்லா இருந்தா எத்தனை முறை வேணாலும் பார்ப்பேன். திருச்சி என் சொந்த ஊர். 1974 ஆம் ஆண்டு இனி சினிமா தான்னு முடிவு பண்ணி சென்னைக்கு ரயிலேறி வந்திட்டேன்.கையில 12 ரூபாய் இருந்துச்சு. ஏதாவது இடத்துல வேலைக்கு சேர்ந்துக்கிட்டே சினிமா வாய்ப்பு தேடுறதுதான் உத்தமம்னு முடிவு பண்ணி எக்மோர் ரயில்நிலையம் எதிரே டூரிஸ்ட் ஹோம்னு ஒரு தங்கும் விடுதி இருந்தது. இன்னும் இருக்குது. அங்க ரூம் பாய் வேலைக்கு சேர்ந்துட்டேன். தினமும் 15 ரூபாய் சம்பளம். மூணு வேலை சாப்பாடு போடுவாங்க. அங்க தங்கறவங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கணும். தேவையான பொருட்களை வாங்கிக்கொடுக்கணும். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுப்பாங்க. ஒரு நாளைக்கு அதில 20, 30 ரூபாய் கிடைக்கும். அதனால வாழ பெரிய பிரச்னை. அப்பவே என்னோட அப்பா, அம்மா யாரும் உயிரோட இல்லை. அதனால் வேலை பார்த்துகிட்டே சினிமாவில் முயற்சி பண்ணேன். ஒண்ணும் சரியா அமையலை. ஆனாலும் பிடிவாதமா இருந்தேன்.

ஒருநாள் அந்த டூரிஸ்ட் ஹோமுக்கு படப்பிடிப்பு குழு ஒண்ணு வந்து ஒருநாள் தங்கினாங்க. தயாரிப்பாளர் பாளை சிதம்பரம் ‘மலர்கள் நனைகின்றன’ படத்தின் படப்பிடிப்பு எக்மோர் ரயில்வே நிலையத்தில் நடக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடக்கணும்னா 2 லட்சம் அட்வான்ஸ் கேட்டுருந்தாங்க போல ரொம்ப அப்செட் ஆகி பேசிக்கொண்டிருந்தார். அப்ப நான் ஒரு ஐடியா சொன்னேன். இப்ப மாதிரி எக்மோர்ல இவ்வளவு பெரிய கட்டிடங்கள் கிடையாது. எங்க டூரிஸ்ட் ஹோம் மாடியில இருந்து பார்த்தா ஸ்டேஷன் உள்ளே வரைக்கும் தெரியும். இந்த ரயில்வே ஸ்டேஷன் மேடையில கதாநாயகனையும், கதாநாயகியையும் நடக்க வைச்சு , இங்க மொட்டை மாடியில கேமரா வைச்சு ஜூம் பண்ணி எல்லா ஷாட்களையும் எடுத்துக்கலாம் சார்னு சொன்னேன். உடனே ஆச்சர்யமா என்னை திரும்பி பார்த்தார். ‘பாருய்யா இவன் 2 லட்ச ரூபாயை மிச்சம் பண்ணிட்டான். நீ சினிமாவுல இருக்கீயா?’ இல்லை சார் டிரை பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொன்னேன். நம்ம படத்துல வேலை பாருன்னு சொல்லி இயக்குநரைக் கூப்பிட்டு சேர்த்து விட்டார்.அந்த படத்துல எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செஞ்சேன். ஆனாலும் ரூம் பாய் வேலையை விடலை. அதன் பிறகு பல வேலைகள். பல படங்கள்! அப்போ சாலிகிராமத்துல மட்டும் 100 சினிமா கம்பெனிகள் இருந்துச்சு. அதுல முக்கால்வாசி உப்புமா கம்பெனிகள். ஷூட்டிங் போகமாட்டாங்க. அப்படியே போனாலும் 10 நாட்கள் அதிகம். அதோட எல்லாம் முடிஞ்சு போயிரும். இப்படித்தான் போயிட்டு இருந்தது என் வாழ்க்கை எங்க டைரக்டர் ஆர்.சி.சக்தியை பார்க்குற வரைக்கும்.

எங்க டைரக்டர் ஆர்.சி.சக்தி படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உணர்ச்சிமயமான கதையை சினிமாவாக எடுப்பதில் அவர் மன்னன். ‘இதுக்கு முன்னாடி வேலை பார்த்து இருக்கியான்னு கேட்டார். அதுக்கு முன்னாடி நான் வேலை பார்த்த படங்களை நான் படங்களாகவே நினைக்கலை. அதனால இல்லைன்னு சொல்லிட்டேன். அப்புறம் எந்த தகுதியை வைச்சிகிட்டு வந்து இருக்கிறேன்னார். உங்க படம் ‘உணர்ச்சிகள்’ 50 முறை பார்த்து இருக்கிறேன்னு அந்த டிக்கெட்களை எடுத்து மேஜை மீது வைத்தேன். அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியல! உன்னை மாதிரி ஆள் தாண்டா எனக்கு தேவைன்னு சொல்லி சேர்த்துகிட்டார். எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த குரு அவர் தான். டிஸ்கஷன் , பாடல் கம்போசிங், எடிட்டிங், கன்டினியூட்டி , சீன் எழுதறது எல்லாம் அவர்கிட்ட தான் கத்துக்கிட்டேன். அவர்கிட்ட சேர்ந்த புதிதில் தான் சுவாரசியமாக ஒரு விஷயம் நடந்தது.ஆர்.சி.சக்தி அவர்கள் ஆபீஸ் போட்டு வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். அந்த படத்தை பைனான்ஸ் வாங்கி ‘ஜாக்பாட்’ சீனிவாசன் பண்றதா இருந்தது. சீனிவாசன் நிறைய படங்களுக்கு அப்ப தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார். அவருக்கு குதிரை ரேஸ்ல பணம் கட்டுற பழக்கம் உண்டு. எனக்கு சில எண்கள் குறிச்சு கொடுத்து அந்த குதிரைகள் மீது கட்டச்சொல்லி அனுப்பினார். நான் கிண்டி ரேஸ் கிளப் போய் அவர் சொன்ன எண்களில் கட்டிவிட்டேன். ரிசல்ட் பார்த்தா நான் கட்டிய எண்களில் உள்ள குதிரைகள் எல்லாம் ஜெயிச்சிருச்சு. போன் பண்ணி சீனிவாசன் சார்கிட்ட சொன்னேன். அவரும் ஆர்.சி.சக்தி சாரும் கார்ல அங்க வந்தாங்க. பேப்பரை வாங்கி பார்த்துட்டு சீனிவாசன் சார் சிரிக்க ஆரம்பிச்சார். நடந்தது என்னன்னா? அவர் சென்னை குதிரைகள் மீது கட்டச் சொல்லி அனுப்பியிருக்கிறார். நான் கட்டினது புனே குதிரைகள். அவை அனைத்தும் அன்று ஜெயிக்கவே அடித்தது ‘ஜாக்பாட்’ 13 லட்சங்கள் பரிசு. எனக்கு மூவாயிரம் ரூபாய் அன்பளிப்பா கொடுத்தார் சீனிவாசன். அவர் ஜாக்பாட் சீனிவாசன் ஆனதும் அப்படித்தான். அந்த பணத்துல ஆரம்பிச்சுதான் ரஜினியை வைச்சு எடுத்த ‘தர்மயுத்தம்’ படம். ரஜினிக்கும், எங்க டைரக்டருக்கும் பெரிய திருப்பு முனையா, சூப்பர் ஹிட் படமா அமைஞ்சது. அதன் பிறகு தொடர்ந்து ‘சிறை’ ‘கூட்டுப்புழுக்கள்’, ‘தாலிதானம்’ ‘மனக்கணக்கு’ அப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்தார். எவ்வளவோ அனுபவங்கள் அவருடன் எனக்கு இருந்திருக்கிறது.

இயக்குநர்கள் ஜெயபாரதி, ருத்ரைய்யா இவர்களுடன் பழகி இருக்கிறேன். நல்ல சினிமான்னா என்ன? அப்படின்னு இவங்க எனக்கு பாடம் எடுத்திருக்காங்க. சினிமாவுல முன்கோபம் இருக்கக் கூடாதுன்னு பின்னாடி உணர்ந்தேன். நல்லது கேட்டது எல்லாம் இருக்கும். பொறுத்து போனாதான் வெற்றி பெற முடியும். ஒருநாள் ஜெயபாரதியோட பேசிகிட்டு இருக்கும் போது ஏன் மக்கள் கிட்ட பணம் வசூல் பண்ணி படம் எடுக்கக் கூடாதுன்னு சொன்னேன். ‘ஓ நல்ல ஐடியாவா இருக்கேன்னு’ அவர் நோட்டீஸ் அடிச்சு மக்கள் கிட்ட வசூல் பண்ணித்தான் ‘குடிசை’ படம் எடுத்தார். ஜெயபாரதி உண்மையில் நல்ல மனிதர். இன்னும் பெரிய உயரங்களுக்கு அவர் போயிருக்கணும்.

எழுத்தாளர் கோவி.மணிசேகரனோட ‘தென்னங்கீற்று’ படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்தேன். அருமையான மனிதர். என் முகத்தை பார்த்தே பணம் தேவையான்னு கேட்டு கொடுப்பார். நிறைய புத்தகங்கள் படிக்கவும், எழுதவும் அவர்கிட்ட கத்துக்கிட்டேன். தேசிய விருது பெற்ற படமான ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படத்தில் இயக்குநர் ஜோதி பாண்டியன்கிட்ட வேலை பார்த்தேன். இப்படியே 1999 ஆம் ஆண்டுவரை என் வாழ்க்கை போச்சு. கடுமையான காய்ச்சல். 3 நாட்கள் எழுந்திருக்க முடியாம அறையில படுத்து இருக்கேன். அடுத்த நாள் காலையில் ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்னு கடைக்கு போனப்ப பேப்பர்ல ‘சுயம்வரம்’ விளம்பரம் பார்த்தேன். நமக்கு ஒரு துணை வேணும்னு முடிவு பண்ணி அந்த சுயம்வரம் நடந்த கல்யாண மண்டபத்துக்கு போனேன்.விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், ஊனமுற்றவர்கள் மூணுவிதமாக பெண்கள் அதில் கலந்துக்கிட்டு இருந்தாங்க. நான் உதவி இயக்குநர் மாத வருமானம் பத்தாயிரம்னு சொல்லியும், யாரும் என்னைக் கண்டுக்கல. அப்புறம் என் நண்பன்தான் நம்ம தான் பேசணும்னு சொன்னேன். அப்படியே பார்த்தேன். ஒரு ஸ்டிக்கை வைச்சிகிட்டு என் மனைவி கன்னிலட்சுமி உட்கார்ந்து இருந்தா! நேர்ல போய் பேசினேன். இருவருக்கும் பிடிச்சு அங்கேயே கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு. அந்த விளம்பரம் பார்த்த இரண்டு மணி நேரத்துக்குள்ள என் வாழ்க்கையில் வசந்தம் வந்திருச்சு! இந்த அளவுக்கு நான் இருக்க என் மனைவி தான் காரணம். வெறும் 30 ரூபாய் கொடுத்தாக் கூட அருமையான உணவு தயாரிச்சு எங்களுக்கு கொடுத்திருவ.எங்களுக்கு ஒரு பையன். ஒரு பொண்ணு. இரண்டு பேரும் நல்ல படிக்கிறாங்க.

அர்ஜுன் கிட்ட கதை சொல்லி படம் பண்ணும் வாய்ப்பை ‘அன்பாலாயா பிரபாகரன்’ கொடுத்தார். ஆனால் அர்ஜுன் கதை கேட்காம ஆறு மாசம் அலைய வைச்சார். அப்புறம் ஒருநாள் கேட்கிறேன்னு சொன்னார். நான் கதை சொல்ல மூட் இல்லைன்னுட்டு வந்துட்டேன். இப்ப நினைக்கும் போது நான் பொறுமையா சொல்லி இருக்கணும்னு தோணுது. சினிமாவுல எதுக்கும் கோபப்படக்கூடாது சார்!.நிறைய முறை படம் இயக்கும் வாய்ப்பு வந்து இறுதி நேரத்தில் நடக்காம போயிருக்கு. இன்னைக்கும் ட்ரெண்ட்ல என்னால படம் பண்ணமுடியும். இன்னைக்கு பேயை வைச்சு தானே எல்லாம் படம் எடுக்கிறாங்க! நான் பேய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மனிதர்களை வைச்சு படம் எடுக்கிறதா ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிஇருக்கேன். காமெடி பின்னும். நிச்சயம், ஜெயிப்பேன் சார்’ என்று சொல்லும் ஹரிக்கு பிடிச்ச இயக்குநர் பாலா! அவர் படங்கள் மட்டும் பார்த்தா மூணு நாளைக்கு தூக்கம் போயிடும் சார்! அற்புதமான படைப்பாளி’ என்கிறார் கண்களில் அகலாத சினிமா கனவுகளுடன்…

விஜய்மகேந்திரன் (எழுத்தாளர் மற்றும் உதவி இயக்குனர்)

‘எங்கேயும் மனிதர்கள்’ நூலில் இருந்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More