(காணாமல் ஆக்கப்பட்டார் தினமான ஆகஸ்ட் 30இல் இலங்கையில் காணாமல் போன பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்குமா? சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் போருக்குப் பின்னரான அரசியலில் புறக்கணிக்கப்பட்ட பரிமாணமாக இருப்பதனை அலசும் ஆய்வாகும்)
போருக்குப் பின்னரான கடந்த பத்தாண்டுகளில் இலங்கைப் பத்திரிகையாளர்களின் வாழ்க்கை என்பது ரத்தத்தாலும் காயங்களாலும் எழுதப்பட்டிருக்கிறது. அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்களின் நிலை என்ன என்பதை அறியாமல் கொலை செய்யப்படும் அளவுக்குக் கொண்டு சென்றதும் வரலாறாகும்.
அரசின் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து தங்கள் குரல் வளைகள் நெறிக்கப்பட்ட நிலையிலும் இறுதிவரை போராடி வந்த கடந்தகால பத்திரிகையாளர்களே இந்தப் போராட்டச் சூழலில் மக்களின் நம்பிக்கை குரல்களாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர்.
பத்திரிகையாளர்கள் எதிர்கொண்ட கடினமான தருணங்களை தற்போது நினைவுகூர வேண்டியது காலத்தின் அவசியமாகும்.
போருக்குப் பின் ஊடக சுதந்திரம்:
இலங்கையில் ஊடக சுதந்திரம் போருக்குப் பிந்தைய சூழலில் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட பரிமாணமாகவே இன்னமும் காணப்படுவதாக சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம்
தெரிவித்துள்ளது. உலகில்
பத்திரிகைச் சுதந்திரம் குறித்து 180 நாடுகளைக் கணக்கில் கொண்டு அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேசப் பட்டியலில் இலங்கை 165-ஆவது இடத்தில் இருப்பதை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின் அமைதிக்காக பத்திரிகையாளர்கள் மிகவும் அழுத்தமான பிரச்சினைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பேச்சு சுதந்திரம் என்பது ஊடகச் சூழலில் கருத்து வேறுபாடுகளை அமைதிப்படுத்த பயன்படுத்துவதாகும். யுத்த காலத்தை விட இரகசியமாக ஊடகத்
துறைகளிலும் குழப்பம் நிலவுகிறது.
அத்துடன் ஊடகத்துறையில் அரசாங்கத்தின் அழுத்தம், தணிக்கை
போன்றவற்றால் தடைகளைத் தாண்டி நேர்த்தியான போக்கை கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கொலையான ஊடகர்களுக்கு நீதி கிடைக்குமா ?
2000 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் இலங்கை வீதிகளில் உலா வரும் வெள்ளை வான்களும் திடீரென தொலைந்து போகும் பத்திரிகையாளர்களும் மிக எளிதாகக் கடந்துபோகக் கூடிய ஒரு நிகழ்வுகளாக இருந்தன.
பத்திரிகையாளர்கள் அரசுக்கு எதிரானவர்களாகச் சித்திரிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கின்றனர். மயில்வாகனம் நிமலராஜன், பிரகீத் எக்னலிகொட, சிவராம் தராக்கி, கெய்த் நோயார், லசந்த விக்கிரமதுங்க, போடல ஜெயந்தா என அநீதி இழைக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் பட்டியல் பெரிதாகும்.
தராக்கி என்ற புனைப்பெயருடன் எழுதிவந்த தமிழ் ஊடகவியலாளர் சிவராம், அரசுக்கு எதிராக எழுதிய தன்னுடைய ஊடக நண்பர் நடேசன் கொலை செய்யப்பட்டபோது, அரசின் அடுத்த குறி தானாக இருக்கலாம் என்று நண்பர்கள் பலர் தன்னை எச்சரித்ததாகக் காணொலி ஒன்றில் பதிவுசெய்திருந்தார்.
அவர் பதிவிட்டதைப் போல, 2005 ஏப்ரல் 28 அன்று வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிவராம் அடுத்த நாள் கொலையுண்ட நிலையில் சடலமாகக் கிடைக்கப் பெற்றார். இதே போல் கொல்லப்பட்ட மற்றொரு பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க. தான் கொல்லப்படப் போகிறோம் என்பதை அறிந்த லசந்த, தனது இறுதி தலையங்கத்தைத் தன் இறப்பிற்குப் பிறகு பிரசுரிக்கச் சொல்லி தனது ஊடக ஊழியர்களிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளார்.
2,500 வார்த்தைகளைக் கொண்ட அந்தத் தலையங்கத்தை அவர் தனது அலுவலகக் கணினியில் ‘ஃபைனல் எட்’ (Final Edit) எனக் குறிக்கப்பட்ட கோப்பில் சேமித்து வைத்திருந்தார். அவர் கொலையின் பின்னர் அந்த 2,500 வார்த்தை தலையங்கத்தை உலகின் முன்னணிப் பத்திரிகைகள் அனைத்தும் பிரசுரித்தன.
“எனது படுகொலை சுதந்திரத்தின் தோல்வியாகக் கருதப்படாது, உயிர் பிழைப்பவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அந்தத் தலையங்கத்தை முடித்திருந்தார் லசந்த விக்கிரமதுங்க.
போடல ஜெயந்தா, கெய்த் நோயார் போன்றோர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். 2010-ம் ஆண்டு ஜனவரி 24, ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னலிகொடவின் நிலை என்னவென்று இன்றுவரை தெரியவில்லை
ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும்:
இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் (வெள்ளைவான் குழு) வரும் இனம் தெரியாத குழுக்களினால் பலவந்தமாக இந்த வாகனங்களுக்கு ஏற்றப்பட்டம் நபர்கள் பின் காணாமல் போயினர்.
போர் நடந்த வருடங்களில் இலங்கையில் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளார்கள். உலகில் இலங்கையிலேயே அதிகமானோர் காணாமல் போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
காணாமல் போவதற்கு அரசே காரணம் என பல காணாமல் போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களும் கூறிய போதும் அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், இத்தகைய குற்றசெயல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையங்கள் சரிவர தமது வேலையை செய்யவில்லை என்று அதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழு தெரிவித்துள்ளது.
தேசிய நல்லிணக்கத்திற்கு ஊடக சுதந்திரம் :
ஊடக சுதந்திரம் தேசிய ஒருமைப்பாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு காரணியாகும். போர் முடிவுற்ற பின்னர் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் ஒரு தேசிய செயல் திட்டத்தை அறிவித்தது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒரு பின்னர், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டதும் அறிந்ததே.
ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆரம்பத்தில் அவநம்பிக்கை காணப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது, வடக்கு- கிழக்கு மக்கள் படும் துன்பங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆயினும் நல்லிணக்க ஆணைக்குழு 2011 நவம்பரில் 400 பக்கங்களுக்கும் அதிகமான அறிக்கையை சமர்ப்பித்திருந்த போதிலும், இரண்டு பக்கங்களுக்கு மேல் ஊடகங்கள் பற்றி குறிப்பிடவில்லை. எவ்வாறாயினும், ஊடகங்கள் பற்றி செய்யப்பட்ட சில பரிந்துரைகள் மிகவும் ஆழமான கண்ணோட்டத்தில் இருந்தன.
கடந்த காலங்களில் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை விசாரித்து தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஊடகவியலாளர்களின் நடமாடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் மீளாய்வு செய்யப்பட்டதுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் குறிப்பிடப்பட்டது.
நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவை மற்றும் பரிந்துரைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான அவதானிப்புகள் மற்றும் ஊடகத்துறையின் அவதானிப்புகளும் முக்கியமானவை.
கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை:
கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆகியவை சர்வதேச அளவில் அடிப்படை மனித உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்டு, எந்த நல்லிணக்கச் செயல்முறையிலும் இரண்டும் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் ஊடக சுதந்திரத்தை மேம்படுத்துவதும், அடிப்படை உரிமைகளுக்கு ஏற்ப அதைப் பாதுகாப்பதும் அவசியம்.
ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது பல்வேறு இனங்களுக்கிடையில் அவநம்பிக்கையையும் அச்சத்தையும் ஏற்படுத்தவே வழிவகுக்கும்.
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இது ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல் மற்றும் நல்லிணக்க ஏற்பாடுகளின் அழுத்தங்களைப் பிரயோகிப்பது போன்றவற்றை பாதிக்கலாம்.
குற்றவியல் சட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் போன்ற பாதகமான சட்ட நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனைத்துலக சட்டம்:
அனைத்துலகச் சட்டத்தின் கீழ் ஒரு நபரை கைது செய்து அவரது கைதை மறுக்கும் போதும், அவர் வைக்கப்பட்டுள்ள இடத்தை மறைக்கும் போதும் பலவந்தமான காணாமல் போதல் இடம் பெறுகின்றது. காணாமல் போதலானது பொதுவாக சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலையை மேற்கொள்வதற்காகவே இடம் பெறுகின்றது.
இலங்கையில் போரின் போது கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள், காணாமல் போன பத்திரிகையாளர்கள் குறித்து மறுவிசாரணை நடத்தப்படும் என்று முன்னாள் அதிபர் மைத்ரிபால 2016 சிறீசேனா தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்குகளில் இதற்கு முன்பு விசாரணை நடைபெற்றபோதிலும், குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை.
2010-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட பிரகீத் ஏக்னாலிகோடா என்ற கார்ட்டூனிஸ்ட் திடீரென காணாமல் போனார். அவரது நிலை இதுவரை கண்டறியப்படவில்லை.
கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட, காணாமல் போன பத்திரிகையாளர்கள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மறுவிசாரணை நடத்த புதிய அரசு முயற்சித்தது.
காணாமல் போன மனிதவுரிமை பணியாளர்கள்:
இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் வாழ் பகுதிகளில் யுத்த அனர்த்தங்களால் பொது மக்களிற்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுப்பட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் கடத்தப்பட்டு காணாமல் போனதும் கொலைச்செய்யப்பட்டனர்.
மக்களுக்காக பணியாற்றிய
தமிழர் புணர்வாழ்வுக் கழக பணியாளர்கள் மற்றும் மனிதவுரிமை பணியாளர்கள் 57 பேர் கடத்தப் பட்டு கொலைச்செய்யப்பட்டனர். இந்த விபரத்தை ஆசிய மனிதவுரிமை ஐ.நா ஆணையம் மூலம் வெளியிட்டது. இவர்கள் அணைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ராஜபட்ச தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது. குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பினரோடு நடைபெற்ற இறுதிப் போரின்போது, பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இலங்கை முன்னிலை வகித்தது.
பத்திரிகைச் சுதந்திரம் குறித்து 180 நாடுகளைக் கணக்கில் கொண்டு அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேசப் பட்டியலில் இலங்கை 165-ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நவீனன்