கனடாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
இதனால், அங்கு உணவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
உணவு நெருக்கடியை சமாளிக்க பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.
கனடாவின் குயெல்ஃப் (Guelph) பல்கலைக்கழக உணவு மற்றும் விவசாய துறை பேராசிரியர் மைக் வான் மேசோ தெரிவித்திருப்பதாவது:
“30 அல்லது 40 வருடங்களுக்கு முன் நாம் சமையல் கலையில் பெற்றிருந்த தேர்ச்சி, எந்த சூழலையும் சமாளிக்கும் விதமாக இருந்தது. ஆனால், அந்த பழக்கம் நம்மை விட்டு போய் விட்டது. அதனால் வாழ்க்கை கடினமாகி வருகிறது.
“உணவு பொருட்களை வாங்க பணம் இருந்தாலும், குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சமைக்கும் கலையை நாம் பழகி கொள்ளவில்லை. இதனால் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது பாதிப்பிலிருந்து தப்ப முடியாது” என்றார்.
இதே கருத்தை வலியுறுத்தும் வகையில், சர்ரே (Surrey) பகுதியில் வசிக்கும் பெண், “சுலபமாக கிடைப்பதால் வெளியே கிடைக்கும் உணவு வகைகளையே உண்டு வந்தோம். 2011 வருடம் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிக்கு பிறகு வீட்டில் சமைப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டி வந்தது.
“பருப்பு மற்றும் பீன்ஸ் போன்றவற்றை கொண்டு பஞ்சாபி உணவு வகைகளை சமைக்க கற்று கொண்டேன். வெளியிலிருந்து உணவு வாங்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து கொண்டோம். இதனால் எங்கள் நிதி நிலைமை சீரடைந்தது” என்றார்.
தற்காலத்தில் எங்கும் உணவகங்களிலிருந்து உணவை வரவழைத்து உண்ணும் பழக்கம் அதிகமாகி வருவதால், கனடாவில் நடப்பது எல்லொருக்கும் படிப்பினை என சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.