யாழ்ப்பாணம் என்று சொன்னாலே கல்விக்கும், கலைகளுக்கும் பெயர் போன இடம் என்று தான் எல்லோரும் சொல்வார்கள்.உண்மையும் அதுவாகத்தான் இருக்கிறது.இப்போது பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் தான் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.அனைத்துத் துறைகளிலும் சாதனை நாயகர்களைக் கொண்டு இலங்கும் யாழ்ப்பாணத்தின் மாவிலங்கையடி அல்வாய் வடமத்தி, அல்வாய் பருத்தித் துறையில் வசிக்கும் அற்புத நாதர் தீபன் இசைத்துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார்.
இசை என்பது எல்லோரையும் வசப்படுத்தும் என்பார்கள்.ஆனால் எந்த ஒரு இசை அறிவும் இல்லாமல் தன்னுடைய கேள்வி ஞானத்தை மட்டுமே மனதில் கொண்டு பாடல்களைப் பாடி பலரையும் மகிழ்வித்து வருகிறார் தீபன்.
பல திருமண நிகழ்வுகளிலும் கொண்டாட்ட நிகழ்வுகளிலும் இவரின் குரல் ஒலிக்காமல் அந்த நிகழ்வுகள் களை கட்டுவதில்லை என்ற அளவுக்கு இன்றைக்குப் பலரையும் இசையால் மகிழ்விக்கிறார் தீபன்.
ஒரு இளைஞனாக இசைத்துறையில் தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எப்போதும் பாடல்களுடனே பயணித்துக் கொண்டிருக்கிறார் இவர். இவருடைய இசை துறை பயணம் சிறு வயது முதலே ஆரம்பமாகி இருக்கிறது.கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் படிக்கின்ற பொழுது கல்வி நிறுவனம் ஒன்றில் வாணி விழா நிகழ்விற்காய் இவர் பாடிய ‘சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையில் பாதி பலம்’ என்ற பாடல் இவரின் இசை துறைக்கு கிடைத்த முதல் படியாகும்.
அந்தப் பாடலின் மூலமாக வெளியுலகிற்கு அறிமுகமாகி பின்னர் ஏராளமான பாடல்களால் ஒரு பாடகனாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றார் தீபன்.
முறைப்படி சங்கீதம் படிக்கவில்லை இருந்தாலும் பாடல்கள் மீது அதீத காதல் கொண்ட தீபனால் சாதாரணமாக எல்லாப் பாடல்களையுமே சரளமாகப் படிக்கக் கூடியதாக இருக்கிறது.யாழ்ப்பாணத்தில் வளர்ந்து வரும் பாடகர்களில் திறமை மிக்க பாடகராக இவர் மிளிர்கிறார். இருந்தாலும் இவருக்குரிய சரியான அங்கீகாரம் கிடைக்கப் பெறுமாக இருந்தால் இவரின் குரலும் இன்னும் பல மேடைகளில் இசையால் ஒலிக்கும்.
தொகுப்பு – RJ டயான்.